திருச்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மணிகண்டம் பகுதியில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் கதிருடன் சாய்ந்தன + "||" + 1,000 acres of paddy fields in Manikandam tilted due to continuous rains in Trichy
திருச்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மணிகண்டம் பகுதியில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் கதிருடன் சாய்ந்தன
திருச்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மணிகண்டம் பகுதியில் சுமார் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் கதிருடன் சாய்ந்தன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகி மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு இந்த மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டாரத்தை சேர்ந்த சோமரசம்பேட்டை, இனாம்புலியூர், அதவத்தூர், போசம்பட்டி, கவுண்டம்பட்டி, போதாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டளை மேட்டு வாய்க்கால் தண்ணீரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு இருந்தனர். கடந்த புரட்டாசி மாதம் நடவு செய்த இந்தப் பயிர்கள் தற்போது முற்றிய நெற்கதிர்களுடன் அறுவடைக்கு தயாராக இருந்தன. இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய இந்த நெற்பயிர்கள் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் வயலில் சாய்ந்தன. இதனால், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இழப்பீடு கேட்டு மனு
இந்நிலையில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள தங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக சில விவசாயிகள் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறந்தவுடனேயே வாய்க்கால் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் முன்கூட்டியே நெல் நடவு செய்தோம். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வறட்சி காரணமாக நெல் அதிகளவில் பயிரிடப்படவில்லை. இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை எங்களுக்கு பேரிடியாக அமைந்து விட்டது. மணிகண்டம் பகுதியில் மட்டும் சுமார் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்து விட்டன' என்று வேதனையுடன் கூறினார்கள்.
மாணவர்கள்
மக்கள் நீதி மையம் கட்சியின் மாணவர் அமைப்பு மாவட்ட செயலாளர் சேட் கமால்தீன் தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சில மாணவர்கள், 2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்து தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிலருக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே அவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு கொடுத்தனர்.
லால்குடி தாலுகா வாளாடி பச்சாம்பேட்டை வளைவை சேர்ந்த சார்லஸ் லியோ அவரது மனைவி ஜான்சிராணி ஆகியோர் கொடுத்த மனுவில் பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக எனது வீட்டின் முன்பாக நான் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவதற்காக காலியாக விட்டு வைத்திருந்த இடத்தில் பொது குடிநீர் குழாய் அமைத்திருக்கிறார்கள். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
வீடு இழந்தவர்கள்
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் பகுதி செம்பட்டு, பட்டத்தம்மாள் தெரு, புது தெரு ஆகிய இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சாலை விரிவாக்கத்திற்காக கடந்தவாரம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சுமார் 40 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாகமங்கலம் அருகே குடியிருக்க டோக்கன் வழங்கப்பட்டது.
ஆனால் அங்குள்ள வீடுகள் உடனடியாக போய் குடியிருப்பதற்கு தகுந்த சூழல் இல்லை எனக்கூறியும் அதுவரை தற்காலிகமாக விமான நிலையம் அருகில் உள்ள பசுமை நகரில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் நடராஜன் தலைமையில் கலெக்டர் சிவராசுவை சந்தித்து மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகர், பாளையங்கோட்டை யூனியன், மானூர், களக்காடு, ராதாபுரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள்.