டீ விற்பதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் நடவடிக்கை எடுக்க கோரி தாய்-மகள் மனு


டீ விற்பதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் நடவடிக்கை எடுக்க கோரி தாய்-மகள் மனு
x
தினத்தந்தி 12 Jan 2021 2:05 AM GMT (Updated: 12 Jan 2021 2:05 AM GMT)

வெடிமருந்து தொழிற்சாலைக்கு டீ விற்பதால் ஒரு குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி தாய்-மகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது டி.முருங்கப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி மணிமேகலை (வயது 55). இவரது மகள் கலை ஈஸ்வரி. இவர்கள் இருவரும் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினைக்காக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், குறைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலக வாசலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கிறார்கள்.

மணிமேகலை அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டீ விற்பனை

நான் 55 ஆண்டுகளாக எங்கள் ஊரிலேயே வசித்து வருகிறேன். வெற்றிவேல் வெடிமருந்து தொழிற்சாலைக்கு நான் ஆரம்பம் முதலே டீ சப்ளை செய்து வருகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு அந்த தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கு யாரும் வேலைக்கு செல்லக் கூடாது என முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உத்தரவு போட்டார். மீறி செல்வோரை ஊரை விட்டு ஒதுக்கி விடுவோம் என்றும் எச்சரித்தார்.

எனது கணவர் கிணற்றில் தவறி விழுந்து கால் ஊனமுற்றவராக இருப்பதாலும், எனக்கு வங்கியில் சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் கடன் இருப்பதாலும் அதனை அடைப்பதற்காகவும், எனது வாழ்வாதாரத்திற்காகவும் வெடிமருந்து தொழிற்சாலைக்கு தொடர்ந்து டீ சப்ளை செய்து வருகிறேன்.

ஊரைவிட்டு ஒதுக்கினர்

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டார். எங்கள் வீட்டுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் எங்கள் வீட்டில் நடந்த இறப்பு காரியத்திற்கு எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வரமுடியாமல் போனது. நானும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என கூறுகிறார்கள். அருகில் உள்ள ஊரில் இருந்து வந்தவரையும் உள்ளே வரவிடாமல் தடுத்து பிரச்சினை செய்தார்கள்.

இது சம்பந்தமாக உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. ஆதலால் எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story