ஷீரடி சாய்பாபா தரிசனத்துக்கு ஆன்லைன் பாஸ்; 14-ந் தேதி முதல் தொடக்கம்


ஷீரடி சாய்பாபா தரிசனத்துக்கு ஆன்லைன் பாஸ்; 14-ந் தேதி முதல் தொடக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2021 2:05 AM GMT (Updated: 12 Jan 2021 2:05 AM GMT)

ஷீரடி சாய்பாபா தரிசனத்துக்காக வருகிற 14-ந் தேதி முதல் ஆன்லைன் பாஸ் பெற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஆன்லைன் பாஸ்
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் முறையை கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுபற்றி கோவில் நிர்வாகமான சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

14-ந் தேதி முதல்...
ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக வருகிற 14-ந் தேதி முதல் ஆன்லைன் பாஸ் வழங்கப்படுகிறது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கும். குறிப்பாக இந்த பாஸ் நடைமுறை வியாழக்கிழமைகள், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், புனித நாட்களில் நெரிசலை கட்டுப்படுத்த உதவும்.

பக்தர்கள் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட நாட்களில் அதிக பக்தர்கள் கூடுவதை தடுக்க கோவில் வளாகத்தில் உள்ள இலவச பாஸ் மற்றும் கட்டண பாஸ் மையம் மூடப்படும். எனவே பக்தர்கள் ஆன்லைன் பஸ் பெற்று தரிசனம், ஆரத்திக்காக வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story