திருச்சி பாலத்தில் மயங்கி கிடந்த வாலிபர் கடத்தப்பட்டவரா? போலீசார் தீவிர விசாரணை


திருச்சி பாலத்தில் மயங்கி கிடந்த வாலிபர் கடத்தப்பட்டவரா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2021 2:11 AM GMT (Updated: 12 Jan 2021 2:11 AM GMT)

திருச்சி பாலத்தில் மயங்கி கிடந்த வாலிபர், தான் கடத்தப்பட்டதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் செட்டியபட்டி பாலத்தில் நேற்று பகல் வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதை கண்ட அந்த பகுதியினர் எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கண் விழித்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், செங்கல்பட்டு மறைமலைநகரை சேர்ந்த பாஸ்கர் மகன் குணா என்கிற குணசேகரன் (வயது 23) என்பது தெரியவந்தது.

மேலும், அவர் அங்குள்ள ஒரு தனியார் தொழிற்கூடத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்ததும், இவர் கடந்த 7-ந் தேதி சென்னையில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், விபத்து நடந்து விட்டதாகவும், அதற்கு உதவும்படி கூறி அவரை அழைத்ததாகவும், இதை நம்பி காரில் ஏறியபோது அவரின் முகத்தை துணியால் மூடி கடத்தி வந்ததாகவும், கண்விழித்து பார்த்தபோது, இங்கு கிடந்ததாகவும் போலீசாரிடம் கூறினார்.

கடத்தல் நாடகமா?

இதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மறைமலைநகரில் உள்ள குணசேகரனின் தந்தை பாஸ்கரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது 4 நாட்களுக்கு முன்பு குணசேகரன் காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பாஸ்கர் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குணசேகரனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் போலீஸ் நிலையம் திரும்பிய அவரிடம் மீண்டும் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தார். முதலில் காரில் கடத்தி வந்ததாக கூறிய அவர், சிறிது நேரத்துக்குப் பிறகு தன்னை லாரியில் கடத்தி வந்ததாகவும் மாற்றி, மாற்றி கூறினார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். ஏ.டி.எம்.மில் இருந்து எடுத்த ரூ.30 ஆயிரத்தை செலவு செய்துவிட்டு அவர் இதுபோல் கடத்தல் நாடகமாடுகிறாரா? அல்லது உண்மையிலேயே அவரை யாரேனும் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்தார்களா? என போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story