மும்பை கடற்கரை சாலை திட்டத்துக்காக நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம்; பணியை முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்


ராட்சத சுரங்கம் தோண்டும் எந்திர பணியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தபோது
x
ராட்சத சுரங்கம் தோண்டும் எந்திர பணியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தபோது
தினத்தந்தி 12 Jan 2021 2:19 AM GMT (Updated: 12 Jan 2021 2:19 AM GMT)

மும்பை கடற்கரை சாலை திட்டத்துக்காக நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.

நாட்டிலேயே பெரிய எந்திரம்
மும்பையில் மேற்கு புறநகர் பகுதியில் இருந்து தென்மும்பைக்கு பொது மக்கள் போக்குவரத்தில் சிக்காமல் விரைவில் வரும் வகையில் கடற்கரை சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக காந்திவிலியில் இருந்து மெரின் டிரைவ் வரை கடற்கரையோரம் 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் சுமார் 4 கி.மீ. நீளத்துக்கு சுரங்கபாதையும் அமைய உள்ளது.

எனவே இந்த சுரங்கபாதை தோண்டுவதற்காக பிரமாண்ட சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசியதாவது:-
இந்த பிரமாண்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் பிரிதர்ஷினி பார்க் முதல் பிரின்சஸ் தெருவரை கடற்கரை சாலை திட்டத்துக்காக சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும். பிரமாண்ட எந்திரம் 12.19 மீட்டர் சுற்றளவு கொண்டது. இது நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம் ஆகும்.

கடற்கரை சாலை திட்டத்துக்காக கடலுக்கு அடியில் 400 மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு இந்த எந்திரம் உதவியாக இருக்கும். இதேபோல 2.07 கி.மீ. நீளம், 10 முதல் 70 மீட்டர் வரை ஆழத்தில் தலா 2 சுரங்க பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 20 சதவீத பணிகள் முடிந்து உள்ளன.

கடந்த 1995-ம் ஆண்டு சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசு மும்பையில் 55 பறக்கும் மேம்பாலங்களை கட்டியது. தற்போது அந்த பாலங்கள் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது. ஆனால் கடற்கரை சாலை புறநகர் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக தென்மும்பைக்கு வர உதவியாக இருக்கும்.

சிவசேனா 2012-க்கு முன்பே இந்த திட்டத்தை உருவாக்கி இருந்தது. கொரோனாவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு மும்பை மேம்பாட்டு திட்டங்களுக்கான போட்டியிலும் வெற்றி பெறும். மும்பை கொரோனாவுக்கு எதிராக போராடிய விதத்தை உலகமே பார்த்து கொண்டு இருக்கிறது. அதேபோல மும்பைவாசிகளின் மேம்பாட்டிலும் நாங்கள் முன்னிலையில் இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

காற்று, ஒலி மாசு குறையும்
மேலும் கடற்கரை சாலை திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, " 8 வழிகளை கொண்ட கடற்கரை சாலையில் வளைவு பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவை இடம்பெற்று இருக்கும். கடற்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்குபுறநகரில் இருந்து நகர் பகுதிக்கு வரும் பயண நேரம்குறையும். காற்று, ஒலி மாசு குறையும். திட்டத்தை விரைவில் முடிக்க பணிகள் பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 4-வது கட்டமாக தான் பிரிதர்ஷினி பார்க் முதல் பிரின்சஸ் தெரு வரை 2 சுரங்க பாதை அமைக்கும் பணி நடக்க உள்ளது. சுரங்க பாதை தோண்டும் 

பணி முடிய 1½ ஆண்டுகள் ஆகும். இதில் முதல் சுரங்கபாதை பணி இந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பரில் முடியும் என எதிர்பார்க்கிறோம் " என்றனர்.

Next Story