அரசின் எச்சரிக்கையை மீறி புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் போராட்டம்


மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தியதையும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதையும்
x
மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தியதையும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதையும்
தினத்தந்தி 12 Jan 2021 3:13 AM GMT (Updated: 12 Jan 2021 3:13 AM GMT)

அரசின் எச்சரிக்கையை மீறி மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

தனியார் மயம்
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு புதுவை அரசும், மின்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதையும் மீறி தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்துறை ஊழியர் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்திருந்தது.

வேலைநிறுத்தம்
இதைத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்த தடை விதித்து கலெக்டர் பூர்வா கார்க் உத்தரவிட்டார். மேலும் மின்துறையும், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நன்னடத்தை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்ட காலமானது கண்டிப்பாக பிரேக்கிங் சர்வீஸ் ஆக கருதப்படும், இதற்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இந்த எச்சரிக்கையை போராட்டக்குழு வினர் ஒரு பொருட்டாக கருதவில்லை. நேற்று அவர்கள் அறிவித்ததுபோல் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். பணிகளை புறக்கணித்த அவர்கள் மின்துறை தலைமை அலுவலகத்தில் கூடினார்கள்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை
மேலும் மின்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். அவர்கள் தவிர துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் மின்துறை ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அவரது முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

தோல்வியில் முடிந்தது
மின்துறை தலைமை பொறியாளர் முரளி, போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் வேல் முருகன் மற்றும் நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

நாங்கள் அறிவித்தபடி எங்கள் போராட்டத்தை தொடங்கினோம். இதற்கிடையே தொழிலாளர்துறை ஆணையர் வல்லவன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது வேலைநிறுத்தம் செய்யக் கூடாது என்பதைத்தான் வலி யுறுத்தினார்கள்.

போராட்டம் தொடர்கிறது
எங்களது கோரிக்கை தொடர்பாக அவர்கள் எதையும் பேசவில்லை. முதல்கட்டமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. எனவே எங்கள் போராட்டம் தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின் கட்டண வசூல், மின் பழுதுபார்ப்பு, மின்சார ரீடிங் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

காரைக்கால்
இதேபோல் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி காரைக்கால் மாவட்ட மின்துறை அலுவலகம் முன், ஊழியர்கள் திரண்டு வந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மின் துறையை தனியார் மயமாக்ககூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக மின்துறை அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story