மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற விவசாயி


மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற விவசாயி
x
தினத்தந்தி 12 Jan 2021 3:20 AM GMT (Updated: 12 Jan 2021 3:20 AM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு நாகை தாசில்தார் அலுவலகத்துக்கு பெட்ரோல் ேகனுடன் வந்து விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பில்லாலி ஊராட்சி, உச்சிக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 40). விவசாயியான இவர் நேற்று பெட்ரோல் கேனுடன் நாகை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கேனை திறந்து அதில் இருந்த பெட்ரோலை தனது தலையில் ஊற்ற முயன்றார். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் ஆனந்தனிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கினர்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் கூறியதாவது:-

பெரும் நஷ்டம் ஏற்படும்

தொடர் மழையால் நான் சாகுபடி செய்து இருந்த 4 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 4 ஏக்கருக்கும் நான் காப்பீடு செய்து உள்ளேன். ஆனால் 3 ஏக்கர் மட்டுமே நிவாரணத்திற்கு கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அதற்கும் தகுந்த ஆவணங்கள் இல்லை என்று காரையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தெரிவித்தனர்.

அரசு அறிவித்த நிவாரண தொகை மூலம் நஷ்டத்தை ஈடு செய்யலாம் என நினைத்திருந்தேன். நிவாரணம் கிடைக்காததால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என பெட்ரோல் கேனுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரிடம், இனிமேல் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

பயிர் நிவாரண தொகை கிடைக்காததால் விவசாயி பெட்ரோல் கேனுடன் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story