வயலில் பயிரை மேய்ந்த காளை மாட்டின் காலை வெட்டிய கொடூரம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு


வயலில் பயிரை மேய்ந்த காளை மாட்டின் காலை வெட்டிய கொடூரம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Jan 2021 3:29 AM GMT (Updated: 12 Jan 2021 3:29 AM GMT)

தஞ்சை அருகே வயலில் பயிரை மேய்ந்த காளை மாட்டின் காலை வெட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் மாட்டுவண்டி வைத்து, தொழில் செய்து வருகிறார். இவருடைய காளைமாடு ஒன்று வீட்டின் அருகில் உள்ள ஒருவரின் வயிலில் பயிர்களை மேய்ந்து விட்டது. இதையறிந்த வயலின் உரிமையாளர் மாட்டின் காலை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மாட்டின் கால் எலும்பு முறிந்து எழுந்து நடக்க முடியாத நிலையில், வயலில் கிடந்துள்ளது. மாட்டின் உரிமையாளர் ஆனந்த் பல இடங்களிலும் தேடிய நிலையில், மாடு கிடைக்கவில்லை. அப்போது அக்கம் பக்கத்தினர், வயல்வெளியில் மாடு கிடப்பதாக கூறிய தகவலின் பேரில், ஆனந்த் சென்று பார்த்தபோது மாட்டின் கால் வெட்டப்பட்டு எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உயிருக்கு போராட்டம்

உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டாக்டரிடம் காட்டியபோது சரி செய்ய முடியாது என டாக்டர்கள் கையை விரித்து விட்டனர். தற்போது மாடு எழுந்து நடக்க முடியாத நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து ஆனந்த் நடுக்காவேரி போலீசில் புகார் செய்தார். ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள ஆனந்த், வாயில்லா ஜீவன் வயலில் மேய்ந்ததால் அரிவாளால் வெட்டியவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Next Story