பொங்கல் பண்டிகைக்காக லாரிகளில் தஞ்சைக்கு வந்து குவியும் வாழைத்தார்கள் விலையும் அதிகரிப்பு


பொங்கல் பண்டிகைக்காக லாரிகளில் தஞ்சைக்கு வந்து குவியும் வாழைத்தார்கள் விலையும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2021 3:32 AM GMT (Updated: 12 Jan 2021 3:32 AM GMT)

தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக லாரிகளில் தஞ்சைக்கு வாழைத்தார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டு விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

தஞ்சாவூர்,

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலை புத்தாடை அணிந்து புதுநெல் அரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைப்பார்கள். இதில் கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் போன்றவையும் இடம் பெறும்.

பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே கரும்புகள் விற்பனைக்கு வந்து விடும். இதே போல பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்களுக்கு முன்னதாக மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து போன்றவையும் விற்பனைக்கு வந்து விடும். பொங்கல் பண்டிகையையொட்டி புதுமணத்தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது வழக்கம். வசதி படைத்தவர்கள் முழு வாழைத்தார் கொடுப்பது வழக்கம்.

வாழைத்தார்

இதற்காக வாழைத்தார் கடந்த சில நாட்களாகவே தஞ்சைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி, காட்டுப்புத்தூர் பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் லாரிகளில் வாழைத்தார் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாழைத்தார் விலையும் அதிகமாக உள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு வந்தாலும் தூத்துக்குடி பகுதியில் இருந்து வரும் வாழைத்தாருக்கு மவுசு அதிகம். பொதுமக்களும் இந்த வகை வாழைத்தாரையே விரும்பி வாங்கி செல்வார்கள். அதன்படி தஞ்சைக்கு தற்போது தூத்துக்குடி பகுதிகளில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு வருகிறது.

பிரித்து அனுப்புகிறார்கள்

தஞ்சை காமராஜர் மார்க்கெட் பகுதிக்குள் லாரிகள் செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வியாபாரிகள் சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தி வைத்து லோடு ஆட்டோக்களில் பிரித்து தஞ்சைக்கும், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைத்து வருகிறார்கள்.

இது குறித்து வாழை மொத்த வியாபாரிகள் கூறுகையில், ‘‘வாழைத்தார் தற்போது ரூ.400 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு லாரியில் 10 டன் வாழைத்தார் வருகிறது. இந்த வாழைத்தார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரை கொள்முதல் செய்து வருகிறோம். இதனால் கடந்த அண்டை விட இந்த ஆண்டு விலையும் அதிகமாக உள்ளது. பொதுமக்களும் தற்போது அதிக அளவில் வாழைத்தார்களை வாங்கி செல்கிறார்கள். இன்றும், நாளையும் வாழைத்தார் அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்’’என்றனர்.

Next Story