மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை + "||" + Thousands of acres of paddy fields affected by heavy rains; Farmers are concerned

வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை

வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகள் கவலை
தஞ்சை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழையால் பொங்கல் கரும்புகளை அறுவடை செய்து எடுத்துச்செல்வதிலும் சிரமம் நிலவி வருகிறது.
தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஜனவரி மாதத்திலும் பெய்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாத இறுதிலேயே பருவமழை முடிந்து விடும். ஆனால் தற்போது ஜனவரி மாதத்திலும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.


நேற்று பகலிலும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே வருகிறது. இரவு வரையிலும் மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் மழை நீர் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ளது. இந்த மழை காரணமாக கடைவீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. தரைக்கடை விற்பனையும் அடியோடு பாதிக்கப்பட்டன.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இந்த தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி அருகே குறிச்சி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால், கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட பகுதியிலும் தற்போது அறுவடைக்கு தயாரான ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.

பல இடங்களில் மழையில் மூழ்கிய நெல்மணிகள் முளைத்து காணப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை நீடித்தால் அதிக அளவு ஏக்கர் நெற்பயிர்கள் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொங்கல் கரும்பு

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் தற்போது பொங்கல் கரும்பு அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தஞ்சை அருகே சூரக்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர், துறையுண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கலுக்கான செங்கரும்புகளை அறுவடை செய்து வயலில் இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை.

மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் கரும்புகளை அறுவடை செய்து கட்டுவதிலும், அதனை சுமந்து கொண்டு சாலைக்கு எடுத்து வருவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. கரும்புகளை ஏற்றுவதற்காக வாகனத்தையும் வயல்பகுதிக்கு எடுத்துச்செல்ல முடியாவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் தஞ்சையை அடுத்த மருங்குளம், வல்லம் பகுதியில் உளுந்து, எள், நிலக்கடலை என பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளதால், மாவட்டத்தில் பயிர்களின் சேதம் அதிகரித்து கொண்டே வருகிறது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அய்யம்பேட்டை 27, கும்பகோணம் 26, பட்டுக்கோட்டை 24, மஞ்சளாறு 23, திருவிடைமருதூர் 17, ஈச்சன் விடுதி 17, நெய்வாசல் தென்பாதி 16, குருங்குளம் 15, தஞ்சை 15, வல்லம் 13, திருவையாறு 12, பூதலூர் 11, மதுக்கூர் 10 ஒரத்தநாடு 10, வெட்டிக்காடு 10, திருக்காட்டுப்பள்ளி 9, அதிராம்பட்டினம் 9, பேராவூரணி 7, கல்லணை 6, அணைக்கரை 6.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் நேற்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்தது. காலை 11 மணியிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. திருக்காட்டுப்பள்ளியில் மழை நீரோடு கழிவுநீரும் கலந்து ஓடியதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தொடர்ந்து பெய்த பலத்த மழையால் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் சாலையோரங்களில் மஞ்சள், இஞ்சி கொத்து வைத்திருந்த வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். வாழைத்தார் ஏலமையத்தில் வாழை ஏலம் தடைபட்டது. மழை காரணமாக வயல்களில் இருந்து கரும்பு வெட்டும் பணிகள் பாதிக்கப்பட்டது. வெட்டப்பட்ட கரும்புகளை தொழிலாளர்கள் மழையில் நனைந்தபடி லோடு வேன், லாரி போன்றவற்றில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

விற்பனை பாதிப்பு

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் அதிக கூலி கேட்பதாகவும், மழையில் நனைந்து கொண்ேட பணியாற்ற தொழிலாளர்கள் முன்வராததால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேவரமுடியாததால் பொங்கல் பண்டிகைக்கு தேவையான வெல்லம், காய்கறி போன்ற பொருட்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்தால் மட்டுமே வியாபாரம் நல்லமுறையில் நடைபெறும் என வியாபாரிகள் கவலையோடு கூறினர். தொடர் மழை காரணமாக மண்பாண்ட உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் செய்யப்பட்ட மண் பானைகளையும் மழையால் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக மண்பாண்ட வியாபாரிகள் தெரிவித்தனர்.

கள்ளப்பெரம்பூர்

வல்லம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அப்பகுதியில் கன மழை வெளுத்து வாங்கியது. வல்லத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் நிரம்பி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. வல்லம் பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக உள்ளது. வல்லத்தில் தோண்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழிகளில் உள்ள மண் பல இடங்களில் உள்வாங்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதைப்போல ஆலக்குடி சாலையில் உள்ள தாழ்வான பேய்வாரி பாலத்்தை மூடியவாறு மழைநீர் ஓடியது. கல்லணை கால்வாய் பாலம் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வயல்களில் மழைநீர் நிரம்பி பயிர்கள் சாய்ந்து காணப்பட்டன.

மக்காச்சோளம் சாகுபடிக்கு பாதிப்பு

தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு, சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் 18 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயல்களில் சோள கதிர்கள் உடைந்து தரையில் கிடைப்பதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

பல வயல்களில் சோளக்கதிர்கள் வயலிலேயே முளைத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை தருவாயில் இருந்த சோளத்தை வயலில் இருந்து மீட்டெடுத்து அதனை வெயிலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காய வைத்த கதிர்களை எந்திரம் மூலமாக பிரித்தெடுத்து விற்பனைக்கும் அனுப்பி வருகின்றனர். ஆர்சுத்திப்பட்டு பகுதியில் மழையால் சேதம் அடைந்த சோளக்கதிர்களை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மக்காச்சோளம் பயிர் சேதம் அடைந்ததாலும், மழையால் உற்பத்திக்கான செலவு அதிகரித்ததாலும் இந்த ஆண்டு மக்காச்சோளம் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

உரிய இழப்பீடு அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பழனி அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்
பழனி அருகே பலத்த மழை காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர்.
2. தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது.
3. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
4. மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் தொடர் மழை: தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கிய நெற்கதிர்கள்
மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியதால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.