சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு தருவார் மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை


சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு தருவார் மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2021 3:49 AM GMT (Updated: 12 Jan 2021 3:49 AM GMT)

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவு பா.ஜனதாவுக்கு இருக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

நாகர்கோவில்,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் நேற்று நாகர்கோவிலில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 14-ந் தேதி சென்னை மதுரவாயலில் நடக்கும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள இருக்கிறார்.

தாக்குதலுக்கு கண்டனம்

மதுரையில் நடந்த நம்ம ஊர் பொங்கல் விழாவில் சில வி‌‌ஷமிகள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, பா.ஜனதா அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இதனை பா.ஜனதா கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த வி‌‌ஷமிகள் தமிழகத்தில் மேலும் சில அசம்பாவிதங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழக பா.ஜனதா தயாராக இருக்கிறது.

தி.மு.க.வுக்கு தோல்வி

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. மோடி தங்கள் நண்பர், பாதுகாவலன் என தமிழக விவசாயிகள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

இந்த சட்டம் தொடர்பாக தி.மு.க. நடத்திய பந்த், போராட்டம், ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் தோல்வியை கொடுப்பார்கள். 41 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு பிரதமரின் ஊக்கத்தொகையாக வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2 ஆயிரத்தை செலுத்தியிருக்கிறார்.

ரஜினி ஆதரவு

தி.மு.க.வில் காங்கிரசுக்கு இன்னும் இடமிருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. ரஜினி தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்புகிறவர். ஆன்மிக அரசியலும், தேசிய அரசியலும் வேண்டும் என விரும்பியவர். ஆன்மிக அரசியலையும், தேசிய அரசியலையும் முன்னெடுத்துச் செல்வது பா.ஜனதா கட்சி. எனவே அவருடைய ஆதரவு பா.ஜ.க.வுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு முருகன் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் உமாரதி, கோட்ட அமைப்புச் செயலாளர் கிரு‌‌ஷ்ணன், குமரி மாவட்ட பொறுப்பாளர் கட்டளை ஜோதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட துணைத்தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ராஜன், மண்டல தலைவர்கள் அஜித்குமார், ராகவன், சிவபிரசாத், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story