போராட்டத்தை கைவிட்டு புதுவை மின் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியிடைநீக்கம்; மின்துறை செயலாளர் எச்சரிக்கை


போராட்டத்தை கைவிட்டு புதுவை மின் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியிடைநீக்கம்; மின்துறை செயலாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2021 3:54 AM GMT (Updated: 12 Jan 2021 3:54 AM GMT)

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் மின்துறை ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று புதுவை மின்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

தனியார் மயம்
புதுவை மின்துறை தனியார் மயமாக்கத்தை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தினை தொடங்கினர். இந்த நிலையில் மின்துறை செயலாளர் தேவே‌‌ஷ்சிங் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு அறிவிப்பின்படி யூனியன் பிரதேசங்களான சண்டிகர், அந்தமான் நிக்கோபார், டையு-டாமன் ஆகிய பகுதிகளில் மின்துறையை தனியார் மயமாக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் உள்ள மின்துறை ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது.

ஆலோசனை
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே மத்திய அரசின் உத்தரவை நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்தநிலையில் மின்துறை ஊழியர்கள் அனுமதி பெறாமல் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். இது சட்டவிரோதமானது. 144 தடை உத்தரவையும் மீறி மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தற்போது பண்டிகை காலம். கொரோனா பாதிப்பும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே மருத்துவமனைகளுக்கும், வீடுகளுக்கும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். 

பொதுமக்களுக்கு மின்வினியோகத்தை சீராக வழங்க ஓய்வுபெற்ற இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை பணிக்கு அழைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மின்துறை அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்கள், பயிற்சி ஊழியர்களை களப்பணிக்கு பயன்படுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பணியிடை நீக்கம்
மின் துறை தனியார்மயமாக்கப்படுவதால் தொழிலாளர்களின் நலனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. எனவே மின்துறை ஊழியர்கள் போராட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் பணிக்கு வராத நாட்களில் ஊதியம் வழங்கப்படாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் போராட்டம் நடத்தும் மின்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story