10 மாதங்களுக்கு பின்பு காளிகேசத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


10 மாதங்களுக்கு பின்பு காளிகேசத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 12 Jan 2021 4:34 AM GMT (Updated: 12 Jan 2021 4:34 AM GMT)

காளிகேசத்தில் 10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் காளிகேசமும் ஒன்று. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் அமைந்துள்ள காட்டாற்றின் அழகையும், இயற்கை அழகையும் ரசித்துவிட்டு குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள். மேலும், இங்குள்ள காளியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக ஏராளமான பக்தர்களும் வருவார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று காளிகேசம் வனப்பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை

முன்னதாக காளிகேசத்தின் நுழைவு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை நடத்தப்பட்டு, சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னரே வன ஊழியர்கள் அனுமதி சீட்டு கொடுத்து அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் வனப்பகுதிக்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காளிகேசம் ஆற்றில் குளித்து, இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியை கண்டு ரசித்தனர். சிலர் காட்டாற்றின் கரையில் உள்ள காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர்.

Next Story