மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள், கார் பறிமுதல் + "||" + 15 arrested for selling tobacco products in Villupuram

விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள், கார் பறிமுதல்

விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள், கார் பறிமுதல்
விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,

விழுப்புரம் அலமேலுபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோரின் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசாரும், விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ராஜலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டுகள் தேவா, நீலமேகம் ஆகியோரும் இணைந்து நேற்று காலை விழுப்புரம் அலமேலுபுரம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.


சாக்குமூட்டை

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 48) என்பதும், இவர் தனது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும், இதில் திருவண்ணாமலை அண்ணா நகரைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (49) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து முருகேசன் கொடுத்த தகவலின்பேரில் திருவண்ணாமலைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற சுபாஷ் சந்திரபோசை மடக்கிப்பிடித்தனர்.

மேலும் விசாரணையில் முருகேசன், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய இருவரும் சேர்ந்து பெங்களூருவில் இருந்து கார், சரக்கு வாகனம் மூலம் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பறிமுதல்

இதனை தொடர்ந்து முருகேசன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்ததோடு அவர்களளிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார், மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒசூரை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு அதனை பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.