சுங்கச்சாவடி மையத்தில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் இரு மடங்கு கட்டணம்


சுங்கச்சாவடி மையத்தில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் இரு மடங்கு கட்டணம்
x
தினத்தந்தி 12 Jan 2021 4:58 AM GMT (Updated: 12 Jan 2021 4:58 AM GMT)

சங்கச்சாவடி மையத்தில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என நகாய் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி,

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 1- ந்தேதி முதல் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(நகாய்) அறிவித்திருந்தது. எனவே வாகன ஓட்டிகள் பாஸ்டேக் திட்டத்திற்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதையடுத்து தமிழகத்தில உள்ள 75 சதவித வாகனங்கள் பாஸ்டேக் திட்டத்திற்கு மாறி உள்ளன.

25 சதவித வாகனங்கள் கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடி மையத்தை கடந்து செல்கின்றன. தற்போது விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மையத்தில் மொத்தமுள்ள 12 வழிகளில் சென்னை-திருச்சி சாலையின் இரு புறமும் கட்டணம் செலுத்தி செல்ல தலா ஒரு வழி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற வழிகள் பாஸ்டேக் வழியாக மாற்றப்பட்டு வாகனங்கள் சுங்கச்சாவடி மையத்தை கடந்து செல்கின்றன.

அறிவிப்பு பலகை

இந்த நிலையில் நகாய் சார்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மையத்தில் வாகன ஓட்டிகளுக்காக அறிவிப்பு பலகை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் வருகிற பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் சுங்கச்சாவடி மையத்தை கடந்து செல்ல அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் எனவும், அனைத்து வழிகளும் பாஸ்டேக் வழியாக மாற்றப்பட்டும் எனவும், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story