பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஆகம விதிகளின்படி நடத்த வேண்டும்; தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பக்தர்கள் மனு


தென்காசி கலெக்டர் அலுவலகத்தில், பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் பக்தர்கள் மனு கொடுக்க வந்தபோது
x
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில், பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் பக்தர்கள் மனு கொடுக்க வந்தபோது
தினத்தந்தி 12 Jan 2021 5:33 AM GMT (Updated: 12 Jan 2021 5:33 AM GMT)

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஆகம விதிகளின்படி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பக்தர்கள் மனு கொடுத்தனர்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் சமீரன் தலைமையில் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டு சென்றனர். கலெக்டர் சமீரன் காணொலிக்காட்சி வழியாகவும் பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

பண்ெபாழி கோவில் பக்தர்கள்
பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் பக்தர்கள், அனைத்து சமுதாயத்தினர் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
அதில், ‘பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் வருகிற 19-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை பாரம்பரிய முறைப்படியும், ஆகமவிதிகளின்படியும், காலம் காலமாக நடக்கும் வழக்கமான நடைமுறைகளான கொடியேற்றுதல், சுவாமி சப்பரம் எழுந்தருளல், வீதி உலா, சண்முகர் எதிர்சேவை காட்சி, 5-ம் திருநாள் மற்றும் 9-ம் திருநாள் தேரோட்டம், அபிஷேகங்கள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

குரூப்-1 தேர்வில்...
காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மாரிகுமார் தலைமையில் மாணவர் அமைப்பினர் கொடுத்துள்ள மனுவில், ‘கடந்த 3-ந்தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வில் 12-க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறுதலாக கேட்கப்பட்டு விடை அளிக்க முடியாமல் இருந்தது. மேலும் வகுப்புவாதம், பிரிவினைவாதம் போன்ற சமூகநல சிந்தனையற்ற சில 
கேள்விகளும் இடம் பெற்றிருந்தது.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் பங்குபெற்ற இந்திய விடுதலை போராட்டத்தின் வரலாற்றை மாற்றியமைக்கும் சில கேள்விகளும் இடம் பெற்றிருந்தது. இதுபோன்ற தவறான தேர்வு முறையை ரத்து செய்து, நியாயமான முறையில் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வுகளை நடத்தி சிறந்த பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி
அச்சன்புதூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜா என்ற ராவணன் வழங்கிய மனுவில், அச்சன்புதூர் நகர பஞ்சாயத்து 1-வது வார்டில் கழிப்பிட வசதி அமைக்க வலியுறுத்தி, நகர பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் மனு வழங்க சென்றபோது, செயல் அலுவலர் தன்னை அவதூறாக பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்து இருந்தார்.

Next Story