மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் வட்டாரத்தில் கனமழைக்கு 800 எக்டேர் பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க கோரிக்கை + "||" + 800 hectares of crops damaged due to heavy rains in Vilathikulam area; Request for compensation

விளாத்திகுளம் வட்டாரத்தில் கனமழைக்கு 800 எக்டேர் பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

விளாத்திகுளம் வட்டாரத்தில் கனமழைக்கு 800 எக்டேர் பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
விளாத்திகுளம் வட்டாரத்தில் கனமழைக்கு 800 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும்சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று காணொளி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. 

பொதுமக்கள் அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் இருந்து காணொளி காட்சி மூலம் கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர்கள் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். அதே நேரத்தில் சிலர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு கொடுத்தனர்.

800 எக்டேரில் பயிர்கள் சேதம்
விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சி துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சேதமடைந்த மற்றும் கருகிய பயிர்களுடன் இழப்பீடு கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட துரைசாமிபுரம், சொக்கலிங்கபுரம், கந்தசாமிபுரம், தெப்பம்பட்டி, ஆற்றங்கரை ஆகிய ஊர்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெய்து வரும் கனமழையால் சுமார் 800 எக்டேர் உளுந்து, பாசிப்பயிறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம் மற்றும் மிளகாய், வெங்காயம், கரும்பு போன்ற பயிர்கள் 
சேதம் அடைந்துள்ளது. எனவே இந்த கிராமங்களில் நிலங்களை ஆய்வு செய்த, பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு தரவேண்டுமென்று’ அந்த மனுவில் கூறியிருந்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு
இதேபோன்று வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் எங்களுடைய விவசாய நிலங்களில் உளுந்து கம்பு, வெள்ளைச் சோளம், மக்காச் சோளம், பாசிப் பயறு, தட்டபயிரு, ஆகியவை பயிர் செய்துள்ளோம். மகசூல் கிடைக்கும் தருவாயில் தற்போது பெய்து வரும் மழையால் பயிர்கள் எல்லாம் அழுகியும், முளைத்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. பயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. இதனால் எங்களுடைய வாழ்வாதாரங்களை மிகவும் பாதிப்படைந்து விட்டது. ஆகவே எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தலைவரின் கணவர் தலையீடு
தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அந்த மனுவில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வர்த்தக ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக மல்லிகா என்பவர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றநாள் முதல், அவரின் கணவர் தான் ஊராட்சி நிர்வாகத்தை நடத்துகிறார். தலைவரின் தலையீட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

பயிர் காப்பீடு திட்டம்
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் கேட்டு கடம்பூர் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அந்த மனுவில் உளுந்து, பாசிப் பயறு, மக்காச்சோளம் பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு பிரீமியம் கட்டிய நிலையில் சென்ற ஆண்டில் பருவமழை சரியான பருவத்தில் பெய்யாமல் காலம் தவறி மழை பெய்ததால், உளுந்து மற்றும் பாசிப் பயறு உளுத்துப் போய் விட்டது. எனது அதற்குஉரிய விலை கிடைக்காமல் போனது. மேலும் மக்காச்சோளம் பயிரில் படைப்பு விழுந்து சரியான விளைச்சல் இல்லாமல் போனது. இந்த நிலை விவசாயிகளின் 
வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எதிர்காலத்தில் விவசாயத்தை தொடர முடியாமல் தவிக்கும் எங்களுக்ககு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

வாதிரியார் சமுதாயம்
தூத்துக்குடி முத்தையாபுரம் வாதிரியார் தெரு பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, வாதிரியார் ஜாதி பேரை புதிய பெயர் மாற்றம் செய்யக் கூடாது. ஆன்லைனில் வழங்கப்படும் வாதிரியார் ஜாதிச் சான்றிதழ்களில் வதிரியன் என தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதை திருத்தி வாதிரியார் என சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். எங்கள் வாதிரியார் சமுதாயத்தை மாற்று சமுதாயத்துடன் இணைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு - இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
2. தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முளைத்து சேதம் அடைந்து உள்ளன. இதுவிவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.