நெல்லையில் பலத்த மழை: மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பலி; நண்பர் படுகாயம்; அணையில் மூழ்கிய சிறுவன் கதி என்ன?


நெல்லை அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் கொம்பையா பிணமாக கிடந்ததை படத்தில் காணலாம்.
x
நெல்லை அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் கொம்பையா பிணமாக கிடந்ததை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 12 Jan 2021 6:10 AM GMT (Updated: 12 Jan 2021 6:10 AM GMT)

நெல்லையில் பெய்த பலத்த மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார். அணையில் மூழ்கிய சிறுவன் கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

நண்பர்கள்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்த மழைக்கு நனைந்த மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பலியானார்.
 
அதன் விவரம் வருமாறு:-
நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள பழவூரைச் சேர்ந்தவர் கொம்பையா (வயது 30). பேட்டை அரசரடி விநாயகர் கோவிலை சேர்ந்த லட்சுமணன் மகன் கனி (21).நண்பர்களான இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு, 
மாலையில் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருவது வழக்கம்.

அதன்படி நேற்று காலையில் கொம்பையா, கனி ஆகியோர் செய்துங்க நல்லூரில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மாலையில் மோட்டார் ைசக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கொம்பையா மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின் இருக்கையில் கனி அமர்ந்திருந்தார்.

மரக்கிளை முறிந்து விழுந்து பலி
நெல்லை அருகே உள்ள வி.எம்.சத்திரத்தை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பஸ் நிறுத்த பகுதிக்கு சற்று முன்பாக வந்துகொண்டிருந்தனர். அப்போது லேசான மழை பெய்தது. அங்கு தொடர் மழையால் நனைந்து வலுவிழந்து நின்றிருந்த ஒரு மரத்தின் பெரிய கிளை திடீரென்று முறிந்து சாலையில் விழுந்தது.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொம்பையா, கனி ஆகியோர் மீது மரத்தின் கிளை விழுந்து அமுக்கியது. இதில் கொம்பையா உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கனி பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே கனியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் மீட்பு
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றி, கொம்பையாவின் உடலை மீட்டனர். மேலும் சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளைகளையும் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கொம்பையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் காட்சி
இதற்கிடையே கொம்பையா, கனி ஆகியோர் மீது மரக்கிளை முறிந்து விழுந்த காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நெல்லை அருகே மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அணையில் மூழ்கிய சிறுவன்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கலியாவூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தச்சு தொழிலாளி சுப்பிரமணியன். இவரது மனைவி நிஷாந்தி. இவர்களுக்கு பார்த்தீபன் (8), கார்த்திக் (5) ஆகிய மகன்கள் உண்டு.

கலியாவூர் பகுதியில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்தது. இதனால் சுப்பிரமணியன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மழை காரணமாக மருதூர் அணை நிரம்பி தண்ணீர் செல்கிறது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் பலர் சென்றனர். சுப்பிரமணியனும் தனது மனைவி, மகன்களை அழைத்துக் கொண்டு சென்றார்.

அப்போது, தண்ணீர் நிரம்பி விழும் பகுதிக்கு அழைத்து செல்லும்படி பார்த்தீபன் தனது தந்தையிடம் கூறினான். இதையடுத்து அவரும், தனது மகனை அழைத்துக் கொண்டு தண்ணீரில் நடந்து சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக பார்த்தீபன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, மூழ்கினான். இதை பார்த்த சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்து அலறினார்.

கதி என்ன?
இதுகுறித்து உடனடியாக முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் இறங்கி பார்த்தீபனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அணையில் மூழ்கிய சிறுவனின் கதி என்னவென்று தெரியாததால் அவனது குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

Next Story