6 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்


6 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Jan 2021 6:22 AM GMT (Updated: 12 Jan 2021 6:22 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

கடலூர்,

கடலூர் பாதிரிக்குப்பத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

மக்களை தேடி மருத்துவம்

ஏழை-எளிய மக்கள் எளிதாக சிகிச்சை பெற மக்களை தேடி மருத்துவம் என்ற உயரிய நோக்கத்தோடு இத்திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளரை கொண்டு காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் சனிக்கிழமையை தவிர்த்து அனைத்து நாட்களிலும் செயல்படும். இங்கு காய்ச்சல், தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜயராயலு, கிரிஜா செந்தில்குமார், வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன், துணை தலைவர் லட்சுமிராமலிங்கம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, விவசாய அணி காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மினி கிளினிக்

இதேபோல் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூர், விசூர், குறிஞ்சிப்பாடி வட்டம் கோரணப்பட்டு சத்திரத்திலும், கடலூர் ராசாப்பேட்டை, கீழ்குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

இதில் தாசில்தார்கள் பண்ருட்டி பிரகாஷ், குறிஞ்சிப்பாடி சுமதி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story