கெலமங்கலம் அருகே அசாம் இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கீழே தள்ளி விட்டு கொன்றது அம்பலம் - வாலிபர் கைது


கெலமங்கலம் அருகே அசாம் இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கீழே தள்ளி விட்டு கொன்றது அம்பலம் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2021 1:13 PM GMT (Updated: 12 Jan 2021 1:13 PM GMT)

கெலமங்கலம் அருகே அசாம் இளம்பெண் சாவில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

ராயக்கோட்டை,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கொண்டா (வயது 25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த குந்துமாரனப்பள்ளியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரிங்கி (20). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

அதே நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜய் ரிக்கியாசன் (27) என்பவரை தனது வீட்டில் அஜய்கொண்டா தங்க வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிங்கி வீட்டில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக கெலமங்கலம் போலீசார் விசாரித்தனர்.

முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருமணம் ஆகி சில ஆண்டுகளுக்குள் இளம்பெண் ரிங்கி இறந்ததால் இதுதொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் ரிங்கியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தலைப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரை பிஜய் ரிக்கியாசன் கீழே தள்ளி கொன்றது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிஜய் ரிக்கியாசன் நேற்று கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

அஜய் கொண்டாவும், பிஜய் ரிக்கியாசனும் நண்பர்கள் ஆவர். அஜய் கொண்டா தனது மனைவி ரிங்கி மற்றும் நண்பன் பிஜய் ரிக்கியாசன் ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் பிஜய் ரிக்கியாசனுக்கு நண்பனின் மனைவி மீது ஆசை ஏற்பட்டது.

அவரை அடைய துடித்த பிஜய் ரிக்கியாசன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அஜய்கொண்டா வீட்டில் இல்லாதபோது ரிங்கியை தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார். அதற்கு ரிங்கி எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார். அந்த நேரம் ரிங்கியை, பிஜய் ரிக்கியாசன் பிடித்து சுவற்றில் தள்ளினார். இதில் சுவற்றில் தலைமோதி ரிங்கி இறந்தார். அவரை கொலை செய்ததும், பிஜய் ரிக்கியாசன் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. கைதான பிஜய் ரிக்கியாசனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story