நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Jan 2021 1:36 PM GMT (Updated: 12 Jan 2021 1:36 PM GMT)

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இங்கு வேட்டி, துண்டு, லுங்கி போன்றவை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழில் ஜவுளி ஏற்றுமதி குறைவு, ஜி.எஸ்.டி., கொரோனா தொற்று போன்ற காரணங்களால் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது எந்தவித முகாந்திரமும் இல்லாமல், பருத்தி நூலின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. 40-ம் நம்பர் நூல் 50 கிலோ ரூ.8,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக ஒரு மாதத்தில் ரூ.12 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இந்த விலை ஏற்றம் நெசவாளர்களை பெரும் நஷ்டம் அடைய செய்து உள்ளது.

மேலும் தொழிலை தொடர முடியாமல் விசைத்தறி கூடங்களை மூடும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாமக்கல், சேலம், கோவை, கரூர், ஈரோடு, விருதுநகர், திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 1 கோடி பேர் நெசவு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். எனவே அரசு விரைவான நடவடிக்கை எடுத்து பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்தி குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Next Story