சேலத்தில் முதியவர் கொலையில் பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேர் கைது - 55 பவுன் நகை மீட்பு; பரபரப்பு தகவல்கள்


சேலத்தில் முதியவர் கொலையில் பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேர் கைது - 55 பவுன் நகை மீட்பு; பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 12 Jan 2021 1:42 PM GMT (Updated: 12 Jan 2021 1:42 PM GMT)

சேலத்தில் முதியவர் கொலையில் பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 பவுன் நகை மீட்கப்பட்டதுடன் இந்த கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 60). இவர் அதே பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி நளினா. இவர்களுடைய ஒரே மகள் ஐஸ்வர்யா திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் 8-ந் தேதி சீனிவாசன் தலையில் காயமடைந்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். அப்போது கடையில் இருந்து வீட்டுக்கு வந்த நளினா இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சீனிவாசனை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சீனிவாசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வீட்டில் தவறி விழுந்து சீனிவாசன் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்து போலீசாருக்கு தெரியாமல் 9-ந் தேதி அவருடைய உடலை தகனம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நளினா வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த 55 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், சீனிவாசன் இறந்த அன்று அந்த தெருவிற்கு 3 வாலிபர்கள் வந்ததும், அதில் 2 பேர் சீனிவாசன் வீட்டுக்குள் சென்றுவிட்டு திரும்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் மணியனூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (25) என்பவர் நேற்று முன்தினம் மதியம் சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் சேகரிடம் சரண் அடைந்தார். அவரிடம் நடந்ததை தெரிவித்துவிட்டு 15 பவுன் நகையை ஒப்படைத்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் சீனிவாசனை கீழே தள்ளி கொலை செய்ததும், அவருடைய வீட்டில் இருந்து 55 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய வேடுகாத்தான்பட்டியை சேர்ந்த கார்த்திக்கண்ணன் (26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவரும் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் போலீஸ் துணை கமிஷனர் செந்தில் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

மணியனூரை சேர்ந்த தமிழ்செல்வன், பொதுமக்களிடம் பழைய பேப்பர்களை வாங்கி அதை சீனிவாசனிடம் விற்று வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்செல்வன், கார்த்திக்கண்ணன் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்கள், தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்றும், இதற்காக பணத்துக்கு என்ன செய்வது என்று பேசினர்.

இந்த நேரத்தில் தமிழ்செல்வன் அவர்களிடம் பழைய பேப்பர் வியாபாரி சீனிவாசன் தனக்கு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்தது குறித்து கூறினார். மேலும் அவரிடம் பணம், நகை அதிகமாக இருப்பதால் அங்கு திருடலாம் என்று முடிவு செய்தனர். இதையடுத்து சம்பவத்தன்று பிற்பகலில் அவர்கள் 3 பேரும் சீனிவாசன் வீடு அருகே சென்றனர். பின்னர் கார்த்திக்கண்ணன் மற்றும் பிளஸ்-2 மாணவர் ஆகியோர் மட்டும் வீட்டுக்குள் சென்று அவரை மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து சீனிவாசன் சத்தம் போடாதவகையில் ஒருவர் சீனிவாசனின் வாயை கைகளால் பொத்திக்கொண்டார். மற்றொருவர் வீட்டில் இருந்த 55 பவுன் நகையை திருடினார். பின்னர் அவர்கள் சீனிவாசனை வேகமாக கீழே தள்ளினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் இறந்ததை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

அதைத்தொடந்து நகைகளை அவர்கள் 3 பேரும் பிரித்துக் கொண்டனர். மேலும் சீனிவாசன் இறப்பு ஊர்வலத்தில் தமிழ்செல்வன் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளதையும் உறவினர்கள் பார்த்துள்ளனர். மேலும் கார்த்திக்கண்ணன், தமிழ்செல்வன் ஆகியோர் சிறுவயதிலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்துள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழ்செல்வன், கார்த்திக்கண்ணன், பிளஸ்-2 மாணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 55 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story