தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மிரட்டுவதாக புகார்: சேலம் கலெக்டர் அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகை


தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மிரட்டுவதாக புகார்: சேலம் கலெக்டர் அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Jan 2021 1:49 PM GMT (Updated: 12 Jan 2021 1:49 PM GMT)

தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மிரட்டுவதாக புகார் கூறி, சேலம் கலெக்டர் அலுவலகத்தை மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்,

அயோத்தியாப்பட்டணம், உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி, அல்லிக்குட்டை, தாதனூர் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், தனியார் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் தங்களை மிரட்டுவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:- அயோத்தியாப்பட்டணத்தை தலைமையிடமாக கொண்டு முல்லை வட்டார களஞ்சியம் என்ற தொண்டு நிறுவனம் 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கீழ் சுற்றுவட்டார கிராமங்களில் 510 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் கடன் வழங்குதல், அதனை திரும்ப பெறும் நடவடிக்கைகளில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நிர்வாக பயிற்சி மற்றும் சில விவகாரத்தில் மதுரையை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி இணைந்து செயல்பட்டு வந்தோம். ஆனால் அந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் சுய உதவி குழுக்களுக்கு எதிராக மாறியதை அடுத்து அதிலிருந்து விலகி முல்லை வட்டார களஞ்சியம் அறக்கட்டளை தனித்து செயல்பட்டு வருகிறது.

இதனால் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் எங்களுக்கு சொந்தமான அலுவலகத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். மேலும், கிராமப்புறங்களுக்கு சென்று மகளிர் சுய உதவிக்குழு பெண்களை சந்தித்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே மதுரையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story