மழையால் சேதமடைந்த பயிர் குறித்து தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆய்வு நடத்த வேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை


மழையால் சேதமடைந்த பயிர் குறித்து தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆய்வு நடத்த வேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2021 3:13 PM GMT (Updated: 12 Jan 2021 3:13 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து தமிழக அரசின் உயர்மட்ட குழு மூலமாக ஆய்வு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆபிரகாம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதிமூலம், ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ராமலிங்கம் மற்றும் விவசாயிகள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல், மற்றும் மிளகாய், இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல், தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, ஆகிய பகுதிகளில் சம்பா நெல் சாகுபடியும், காளையார்கோவில், இளையான்குடி, சிங்கம்புணரி, திருப்புவனம், தாலுகாக்களில் மிளகாய் சாகுபடி நடை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர், மாதங்களில் பெய்த தொடர் மழையால் விளைச்சல் பெற்ற நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. தற்போது ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பெய்யும் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் சூழ்ந்து அறுவடைக்கு தயாரான பயிர் சாய்ந்து மூழ்கியுள்ளன. மேலும் நெல் அறுவடை செய்வதற்கு தேவையான எந்திரங்களும் உரிய அளவில் கிடைக்காமல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டப்பட்டுள்ளனர். மேலும் நிவர் புயல், மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் அதேசமயம் தமிழக அரசு உயர்மட்ட குழுவை அமைத்து சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அனைத்து வகை விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story