காரைக்குடி, இளையான்குடி பகுதியில் தொடர் மழை: நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை


காரைக்குடி, இளையான்குடி பகுதியில் தொடர் மழை: நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 12 Jan 2021 3:25 PM GMT (Updated: 12 Jan 2021 3:25 PM GMT)

காரைக்குடி, இளையான்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

காரைக்குடி,

இலங்கை பகுதியையொட்டி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று முதல் நாளை மறுதினம் வரை தென் தமிழகத்தில் உள்ள மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது.

சிவகங்கையில் நேற்று அதிகாலை 3.30 மணி முதல் விட்டு, விட்டு சிறு தூறலுடன் மழை பெய்தது. இந்த மழை மாலை 5.30 மணி வரை நீடித்தது.

இதேபோல் இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இளையான்குடி, கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கரும்புகூட்டம், தெற்கு கீரனூர், வடக்கு கீரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வயலில் பயிரிட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டது.

நெல் வயலில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்தன. சில இடங்களில் மூழ்கிய நெற்பயிர் முளைக்க தொடங்கி உள்ளன. தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் வயலுக்கு சென்று அங்கு தேங்கி உள்ள மழைநீரை வடிகட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதோடு மழைநீரில் மூழ்கிய நெற்கதிர்களை கையோடு அள்ளி பார்த்து கண்ணீர் விட்டு கலங்கினார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த 3 மாதங்களாக அரும்பாடுபட்டு நெற்பயிரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தோம். அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சேதமாகி விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை கதையாக போனது எங்களை போன்ற விவசாயிகளின் நிலைமை.

வட்டிக்கு பணம் வாங்கி நிலத்தில் விதைத்தோம். அறுவடை செய்து வட்டியை அடைத்து விடலாம் என்று நினைத்து இருந்த நேரத்தில் இயற்கை இப்படி ஆக்கி விட்டதே என மன வேதனையுடன் தெரிவித்தனர். அதோடு இந்த ஆண்டு நெல்விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

காளையார்கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று வாரச்சந்ைத நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று மழை பெய்தது. இந்த மழையால் சந்தையில் சாலையோரம் பொருட்கள் வைத்திருந்த வியாபாரிகள் பெரிதும் அவதி அடைந்தனர். அதே போல தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரவும் தயக்கம் காட்டினார்கள். இதனால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிவகங்கை-7, மானாமதுரை-5.3, இளையான்குடி-23, திருப்புவனம்-2.6, தேவகோட்டை-17.2, காரைக்குடி-15, திருப்பத்தூர்-4.2, காளையார்கோவில்-11.6, சிங்கம்புணரி-5.2. மாவட்டத்தில் அதிக அளவாக இளையான்குடியில் 23 மில்லி மீட்டரும், குறைந்தளவாக திருப்பத்தூரில் 4.2 மில்லி மீட்டரும் பதிவாகியிருந்தது.

Next Story