இளைஞர்களுடன் கைகோர்த்து செயல்பட்டால் நாளை நமதாகும் - தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு


இளைஞர்களுடன் கைகோர்த்து செயல்பட்டால் நாளை நமதாகும் - தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2021 4:14 PM GMT (Updated: 12 Jan 2021 4:14 PM GMT)

இளைஞர்களுடன் கைகோர்த்து செயல்பட்டால் நாளை நமதாகும் என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

கோவை,

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று 2-வது நாளாக கோவை கணபதி, துடியலூர் எம்.டி.பி. சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் திறந்தவேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இங்கே இன்னும் 3 மாதத்தில் நாம் இதேபோல் வாழ்க்கையை தொடர போகிறோமா அல்லது தமிழகத்தை சீரமைக்க போகிறோமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். முதல் முறையாக ஓட்டு போடுகிறவர்கள், முதல்முறையாக தமிழகத்தின் அரைநூற்றாண்டின் ஒரு சரித்திரத்தை படைத்து காட்ட போகிறீர்கள்.

அதை நீங்கள் செய்வது மட்டுமல்ல, ராஜவிசுவாசம் என்பது போல் செய்த தவறையே மீண்டும் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் நீங்கள் தான் அறிவுரை சொல்லி மனதை மாற்றி, மாற்றத்திற்காக அவர்களை ஓட்டுப்போட வைக்க வேண்டும்.

நீங்கள் சென்று அவர்களிடம் சொல்லுங்கள், சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள், சாதிப்பவன் யார் என்று பார்த்து ஓட்டுப்போடுங்கள். அப்படி செய்தால் நிச்சயம் நாளை நமதாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்னூர் பஸ் நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

புதிதாக வாக்களிக்க போகிறவர்கள்தான், புதிய அரசியலை அறிமுகப் படுத்த போகிறீர்கள். அந்த பொறுப்புடன் நீங்கள் ஓட்டு போட வேண்டும். நேர்மைக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று நீங்கள் நினைத்து விட்டால் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் நினைவு உங்களுக்கு வரும். அதை வலியுறுத்தவும், நினைவுப்படுத்தவும்தான் இந்த பயணம்.

இங்கே மக்கள் நீதி மய்யம் தொண்டர்களிடம் என்னுடைய அறிவுரை என்னவென்றால், இங்கே கூடியிருப்பவர்கள் மிகுதியான அன்புடன் நம்மை நாடி வந்துள்ளனர்.

அவர்களை நம் கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும். அதனை செய்து காட்டுங்கள். இங்கே இளைஞர்கள் பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுடன் நீங்கள் கைகள் கோர்த்து விட்டால் நாளை நமதாகும். சரித்திரம் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பு இது. தயவுசெய்து அதை உபயோகித்து கொள்ளுங்கள்.

இது நேர்மைக்கும், ஊழலுக்குமான ஒரு போர். அதில் உங்கள் சார்பு நேர்மையின் பக்கம்தான் இருக்க வேண்டும். இதில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நேர்மைக்குதான் போட்டாக வேண்டும். காரணம் இங்கே நீங்கள் காசு கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டம் இல்லை. இங்கே நேர்மை நிரம்பி வழிகிறது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு தாங்கி பிடித்து நாளை நமதாக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள புறப்பட்டு சென்றார்.

Next Story