‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் குஜராத், பீகார் மாநில இடைத்தரகர்களுக்கும் தொடர்பு - சரண் அடைந்த ரஷீத் பரபரப்பு வாக்குமூலம்


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் குஜராத், பீகார் மாநில இடைத்தரகர்களுக்கும் தொடர்பு - சரண் அடைந்த ரஷீத் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 12 Jan 2021 4:35 PM GMT (Updated: 12 Jan 2021 4:35 PM GMT)

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் குஜராத், பீகார் மாநிலங்களை சேர்ந்த இடைத்தரகர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக கோர்ட்டில் சரண் அடைந்த ரஷீத் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேனி,

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் மற்றும் 4 மாணவர்கள், 2 மாணவிகள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய இடைத்தரகராக கேரள மாநிலத்தை சேர்ந்த ரஷீத் என்பவர் செயல்பட்டதால், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 7-ந்தேதி ரஷீத் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தேனி கோர்ட்டு கடந்த 8-ந்தேதி அனுமதி அளித்தது.

இதையடுத்து இடைத்தரகர் ரஷீத்தை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

பின்னர் 3 நாட்கள் விசாரணையை தொடர்ந்து ரஷீத்தை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ரஷீத்திடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ரஷீத் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டதாக தெரிவித்தனர். ரஷீத்திடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு பீகாரை சேர்ந்த தீபக் பாய் என்ற இடைத்தரகர் மூளையாக செயல்பட்டு உள்ளார். அவரிடம் ரஷீத்தும், குஜராத்தை சேர்ந்த ஒருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு இருக்கின்றனர்.

ரஷீத்தை போன்றே குஜராத்தை சேர்ந்த நபரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு மாணவர்களை குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்த்து இருக்க வாய்ப்புள்ளது. 'நீட்' தேர்வு வருவதற்கு முன்பாகவே தீபக்பாயுடன் ரஷீத்துக்கு தொடர்பு இருந்தது. அப்போதே அவர் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கி கொடுக்கும் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். அந்த பழக்கத்தில் இவர்கள் 'நீட்' தேர்வு ஆள்மாறாட்டத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த வழக்கில் குஜராத், பீகார் மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. அப்போதுதான் ரஷீத் தனது வாக்குமூலத்தில் அளித்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானது என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடைத்தரகர் ரஷீத் மேலும் சிலரை கைகாட்டி உள்ளதால், இந்த வழக்கு சங்கிலித் தொடர் போல் நீள்கிறது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே ஆள்மாறாட்டம் செய்து மாணவ, மாணவிகள் சிக்கி உள்ளனர். இப்போது பீகார், குஜராத் மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இன்னும் விசாரணையை தீவிரப்படுத்தினால் குஜராத், பீகார் மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா? என்பது தெரியவரும்.

Next Story