திண்டுக்கல்லில், பொங்கல் பரிசு டோக்கன் வாங்க திரண்ட தொழிலாளர்கள் இடையே தள்ளு-முள்ளு


திண்டுக்கல்லில், பொங்கல் பரிசு டோக்கன் வாங்க திரண்ட தொழிலாளர்கள் இடையே தள்ளு-முள்ளு
x
தினத்தந்தி 12 Jan 2021 4:49 PM GMT (Updated: 12 Jan 2021 4:49 PM GMT)

திண்டுக்கல்லில், பொங்கல் பரிசு டோக்கன் வாங்க திரண்ட தொழிலாளர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நலவாரிய அலுவலகத்திலும், பொங்கல் பரிசு பொருட்கள் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று காலையில் பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன் வாங்குவதற்காக தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குவிந்தனர். பின்னர் அவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன்களை பெற்றுக்கொண்டு எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரிக்கு சென்று பொங்கல் பரிசு பொருட்களை வாங்கிச்செல்ல தொடங்கினர்.

நேரம் செல்லச்செல்ல நலவாரிய அலுவலகத்துக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் முண்டியடித்துக்கொண்டு முன்னேறிச்செல்ல தொடங்கினர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதன் காரணமாக டோக்கன் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நலவாரிய அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைக்காதோ? என்ற அச்சத்தில் வரிசையைவிட்டு விலகி முன்னேறி வந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய அதிகாரிகள் அனைவருக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். எனவே வரிசையில் நின்று டோக்கன்களை பெற்றுச்செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் வரிசையில் காத்திருந்து டோக்கன்களை பெற்றுச்சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story