மாவட்ட செய்திகள்

சாதியை பார்த்து வாக்களிக்காமல் சாதிப்பவருக்கு ஓட்டு போடுங்கள் - திருப்பூரில் கொட்டும் மழையில் கமல்ஹாசன் பேச்சு + "||" + Look at the caste and vote for the achiever without voting - Kamal Haasan speech in the pouring rain in Tirupur

சாதியை பார்த்து வாக்களிக்காமல் சாதிப்பவருக்கு ஓட்டு போடுங்கள் - திருப்பூரில் கொட்டும் மழையில் கமல்ஹாசன் பேச்சு

சாதியை பார்த்து வாக்களிக்காமல் சாதிப்பவருக்கு ஓட்டு போடுங்கள் - திருப்பூரில் கொட்டும் மழையில் கமல்ஹாசன் பேச்சு
சாதியை பார்த்து வாக்களிக்காமல் சாதிப்பவருக்கு ஓட்டு போடுங்கள் என்று திருப்பூரில் கொட்டும் மழையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
திருப்பூர்,

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி புதிய பஸ் நிலையம், காங்கேயம் ரோடு சி.டி.சி. கார்னர், புஷ்பா ரவுண்டனா, அனுப்பர்பாளையம் புதூர், பாண்டியன் நகர் பஸ் நிறுத்தம், பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய இடங்களில் கமல்ஹாசன் காரில் நின்றவாறு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்பது உங்கள் கர்ஜனையில் தெரிகிறது. இது சினிமா நட்சத்திரத்தை பார்க்க வந்த கூட்டம் இல்லை. மாற்றத்திற்காக வந்த கூட்டம், நேர்மையாக வந்த கூட்டம். யாரையும் காசு கொடுத்து கூட்டி வரவில்லை. அதுவே நீங்கள் நேர்மையாளர்கள் என்பதற்கு முதல் அத்தாட்சி. இது கட்சிகளுக்கு இடையேயான போர் அல்ல. நேர்மைக்கும், ஊழலுக்குமான போர். அதில் உங்கள் வாக்கு நேர்மையின் பக்கமே இருக்க வேண்டும். முதலையை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என கேட்டு இருக்கிறோம். இன்று தமிழகத்தை விழுங்கிக்கொண்டு இருக்கும் பண முதலைகளிடம் இருந்து பாடி எல்லாம் தமிழகத்தை நாம் மீட்க முடியாது. பணமுதலைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க உங்கள் உதவி தேவை. உங்களின் ஓட்டு தேவை. முதல்முறையாக ஓட்டுப்போடுபவர்கள் யோசித்து சாதியை பார்த்து ஓட்டுப்போடாமல் சாதிப்பவருக்கு ஓட்டுப்போடுங்கள். இளைஞர்களுக்கு மட்டுமல்ல, முதியவர்கள், தாய்மார்கள் என அனைவருக்கும் இது பொருந்தும்.

மக்களை ஏழையாக வைத்திருந்தால் தான் தேர்தலின் போது 5 வருடத்துக்கு உங்களை குத்தகைக்கு எடுக்க முடியும். அதனால் ஏழையாகவே உங்களை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வறுமைக்கோடு என்று சொல்கிறார்கள். உங்களை செழுமைக்கோட்டை நோக்கி நகர்த்துவதும், அதற்கு மேலே கொண்டு செல்வதும் தான் மக்கள் நீதி மய்யத்தின் கனவு திட்டம். நகரங்களில் திறந்த வெளியில் சாக்கடை பாய்கிறது. சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக எங்கு பார்த்தாலும் சாலையில் குழி தோண்டி வைத்துள்ளார்கள். இதற்கு மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கு மக்கள் ஆட்சி நடக்க வேண்டும். இங்கு குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. அதை மாற்ற முடியும்.

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழகத்தில் மழை பெய்கிறது. ஆனால் இங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அதற்கு காரணம் நீர் மேலாண்மை தெரிந்த தமிழர்கள் இன்று பணவசூல் வேட்டையில் இறங்கி விட்டதால் நமது பெருமை எல்லாம் சீரழிந்துக்கொண்டு இருக்கிறது.

திருப்பூரில் அன்னிய நிறுவனங்கள் அளிக்கும் பின்னலாடை ஆர்டர்களை செய்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இருந்திருந்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு தொழில் முனைவோரை உருவாக்கி இருக்க முடியும். இப்போதும் தாமதம் ஆகிவிடவில்லை. நீங்கள் 3 மாதத்தில் எடுக்கும் முடிவு அதற்கான மாற்றத்தை இங்கு கொண்டு வர முடியும். நொய்யல் ஆற்றை பார்த்து நொந்து போனேன். இவற்றை சீரமைக்க முடியும். சுற்றுச்சூழலுக்கான பல நல்ல திட்டங்கள் மக்கள் நீதி மய்யத்திடம் உள்ளது. சுற்றுச்சூழலை பற்றி ஆழமாக சிந்திக்கும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி. திருப்பூரில் வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம் இவற்றுக்கு செலவு செய்ததை போக கையில் மிஞ்சுவதை டாஸ்மாக் பறித்துக்கொள்கிறது.

குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கொடுத்தால் இங்கு நிறைந்த சம்பளத்துடன் வீடு திரும்பலாம். அந்த ஏற்பாட்டை செய்ய முடியும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று கூறிய எங்கள் கட்சியால் இதை செய்து காட்ட முடியும். வேலையில்லாத இளைஞர்கள், பட்டதாரிகள் நிலையை மாற்றி, பலருக்கும் வேலை கொடுக்கும் முதலாளிகளாக மாற்ற முடியும். தொழில் முனைவோராக மாற்றுவது எங்கள் திட்டங்களில் ஒன்று. தரமான மருத்துவமனைகள் மக்களின் தேவையாக உள்ளது. இ.எஸ்.ஐ. என்று உங்கள் சம்பளத்தில் 2 சதவீதம் பிடிக்கிறார்கள். அதை மொத்தம் சேர்த்தால் ரூ.20 கோடியாகும். அதை உங்களுக்கு செலவு செய்தால் திருப்பூர் வேறு வடிவில் இருக்கும். அந்த வேறு வடிவத்தை கொண்டு வரும் கட்சியாக, நிறைவேற்றும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் மாநகராட்சி நிர்வாகம் பழுதுபட்டு கிடக்கிறது. அதை பழுது பார்க்க வேண்டும். நீங்கள் ஆணையிட்டால் அது நடந்தே தீரும். ஆணையிடுங்கள். தமிழகம் தலைநிமிரும். தமிழகத்தை சீரமைப்போம்.

திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள சிற்பிகளை உலகம் அறியச்செய்ய வேண்டும். அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பாத்திரம் செய்யும் கலைஞர்களை உலகம் அறியச்செய்ய வேண்டும். இது நடக்கக்கூடிய காரியம். இன்னும் ஏன் நடக்கவில்லை என்பது தான் வியப்பாக உள்ளது. இத்தனை திறமை இருக்கும் இந்த ஊர் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். அதை மக்கள் நீதி மய்யம் செய்து காட்டும். இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி. மருத்துவமனை கிடைக்கவில்லை. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நாம் நடத்தினோம். இப்போது கொள்ளையனே வெளியேறு என்று போராட்டத்தை நடத்த வேண்டும். அதன் கூர் நுனியாக நிற்க நான் தயார். அதற்கு நீங்களும் என்னுடன் துணை நிற்க வேண்டும்.

மக்கள் நீதிமய்யம் ஒவ்வொரு ஊரிலும் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க இருக்கிறது. இதனால் வேலையில்லாத நிலையை போக்க முடியும். பரமக்குடியில் ஒரு திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒவ்வொரு ஊரிலும் தகுதிக்கேற்ப அதை செய்ய முடியும். அதற்கு உங்கள் உதவி வேண்டும்.

அன்பு மழை நம்மை நனைக்கிறது. உங்களுக்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் என் எதிரி. நீங்கள் நேர்மையின் பக்கம் நிற்க வேண்டும். நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு பாலம் பயன்படும். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்கு பாலம் என்பதை, லாபம் என்று பார்க்கிறார்கள். அதனால் தான் பாலம் எல்லாம் பாதியில் நிற்கிறது. அதை முடிக்க வேண்டும். போக்குவரத்தை எளிதாக்க வேண்டும். அதை செய்வதற்கு நேர்மையுடன் வந்துள்ளோம்.

இன்னும் 3 மாதத்தில் நீங்கள் சரித்திரத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதை நன்கு பயன்படுத்துங்கள். தமிழகத்தை சீரமைப்போம். தமிழகம் தலைநிமிரட்டும். அதை நீங்கள் செய்தால் நாளை நமதாகும். அந்த வெற்றி கர்ஜனையுடன் எனது பயணத்தை தொடர்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசன் பேச்கைக்கேட்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து செல்போனில் படம் பிடித்தனர். பிரசாரத்தின் போது மழை பெய்தது. மழையில் நனைந்தபடி கமல்ஹாசன் பேசினார். மக்களும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர். உயரமான கட்டிடங்களில் நின்று மக்கள் அவருடைய பேச்சை கேட்டனர். திருப்பூரில் இரவு 7 மணி அளவில் அவினாசி ரோடு, பி.என்.ரோடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டதால் மாநகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக கமல்ஹாசனுக்கு மண்ணரையில் திருப்பூர் வடகிழக்கு மாவட்ட செயலாளர் கமல் கே.ஜீவா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சாய்பாரத், நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் புகழேந்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மாவட்ட செயலாளர் கஸ்தூரி தங்கராஜ், விவசாயி அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், நகர செயலாளர் கமல் பி.பாபு, தெற்கு நகர செயலாளர்கள் ஜான்சன், சக்திவேல், வடக்கு நகர செயலாளர்கள் அருள் கண்ணன், தண்டபாணி, இளைஞர் அணி வடக்கு நகர செயலாளர் சிவனேஸ்வரன், நற்பணி இயக்க நகர செயலாளர்கள் முத்துராமசாமி, பசீர், நிர்வாகிகள் மணிகண்டன், லெனின், இன்பராஜ், கோபாலகிருஷ்ணன், செல்வம், அய்யாசாமி, அஷ்ரப்அலி, துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.