சென்னை கடற்கரையில் பெண்களிடம் ஆபாச பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பு 3 பேர் அதிரடி கைது


சென்னை கடற்கரையில் பெண்களிடம் ஆபாச பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பு 3 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 13 Jan 2021 1:09 AM GMT (Updated: 13 Jan 2021 1:09 AM GMT)

சென்னை பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் பெண்களிடம் ஆபாச பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பியதாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

இணையதளங்களில் புற்றீசல்கள் போல இப்போது யூடியூப் சேனல்கள் பெருகிவிட்டன. இந்த சேனல்களில் பொதுமக்களுக்கு பயன்படும் நல்ல விசயங்களும் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சிகளும் வெளியிடப்படுகிறது.

அதிகமான பேர் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை நடத்துவோருக்கு அதிக அளவில் பணம் கொட்டும். இதனால்தான் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள்.

நகைச்சுவையுடன் ஆபாசம்

சென்னை டாக்ஸ் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் செயல்பட்டு வந்தது. இந்த சேனலில் ஆபாசத்தை நகைச்சுவை கலந்து வழங்கி வந்தனர். சமீபத்தில் சென்னை பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை பகுதிக்கு உடற்பயிற்சி மற்றும் காற்று வாங்க வரும் பெண்களிடம் முதலில் பேச்சு கொடுத்து, பின்னர் படிப்படியாக ஆபாசமான கேள்விகளை கேட்டு பேட்டி எடுத்து, சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் ஒளிபரப்பி விட்டனர்.

தாம் கொடுக்கும் பேட்டி யூடியூப் சேனலில் வெளிவரும் என்பது கூட தெரியாமல் சில பெண்கள், தங்கள் அந்தரங்க விசயங்களை கூட பகிர்ந்துள்ளனர். இளம்பெண்கள் தங்களது காதல் அனுபவங்களை வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளனர்.

தங்களுக்கு வேண்டிய பெண்களை பொதுமக்களை போல கடற்கரை பகுதிக்கு வரவழைத்து, முதலில் ஆபாசமான கேள்விகள் கேட்டு பேட்டி எடுப்பார்கள். இதைப்பார்த்து மற்ற இளம்பெண்கள், இளைஞர்களை தூண்டிவிட்டு பேட்டி எடுத்துள்ளனர். தங்களது பேட்டி ஆபாசமான முறையில் யூடியூப் சேனலில் வெளியானதை பார்த்து பேட்டி கொடுத்த பல பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புகார்கள் குவிந்தது

இது பற்றி சென்னை டாக்ஸ் யூடியூப் நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்ட பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளனர். பேட்டி எடுக்கும்போதே யூடியூப் சேனலில் அது வெளிவரும் என்று சொல்லாமல், பேட்டியை வெளியிட்டதை பலரும் எதிர்த்தனர்.

சென்னை டாக்ஸ் யூடியூப் நிறுவனம், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க இதுபோல் அப்பாவி பெண்களை ஏமாற்றி ஆபாசமாக பேட்டி எடுத்து, சட்டவிரோதமாக வெளியிடுவதாக சென்னை சாஸ்திரிநகர் போலீசில் நிறைய புகார்கள் குவிந்தன.

இதுபோல் இளம்பெண்களை ஏமாற்றி எடுத்த பேட்டி அடங்கிய 200 வீடியோக்கள் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளதாகவும், சுமார் 7 கோடி பேர் அவற்றை பார்த்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு-கைது

இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பலவேசம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் ஆசின்பத்சா (வயது 23) , கேமராமேன் அஜய்பாபு (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (31) என்பவரும் கைதானார்.

இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த யூடியூப் சேனல் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எச்சரிக்கை

சென்னை பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சினிமா காட்சிகளை தணிக்கை செய்வது போல, யூடியூப் சேனல்களில் வெளியாகும் காட்சிகளையும் தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story