பறவை காய்ச்சலை விரைவில் கண்டறிய உயிரி பாதுகாப்பு ஆய்வகம் அமைக்க திட்டம்


பறவை காய்ச்சலை விரைவில் கண்டறிய உயிரி பாதுகாப்பு ஆய்வகம் அமைக்க திட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2021 2:21 AM GMT (Updated: 13 Jan 2021 2:21 AM GMT)

பறவை காய்ச்சலை விரைவில் கண்டறியும் வகையில் மராட்டியத்தில் உயிரி பாதுகாப்பு ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் பா்பானி, ரத்னகிரி, தானே, மும்பை உள்ளிட்ட இடங்களில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் இறந்து கிடந்த 2 காகங்களுக்கு சோதனை செய்ததில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய்கள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து மராட்டியத்தில் பறவை காய்ச்சல் சோதனையை விரைவாக மேற்கொள்ளும் வகையில் 3-வது அளவிலான உயிரி பாதுகாப்பு ஆய்வகத்தை தொடங்க மாநில அரசு நிதி ஒதுக்க உள்ளது.

வதந்தியை தடுக்க வேண்டும்

மேலும் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே பறவை காய்ச்சல் குறித்து வதந்திகள் பரவாமல் தடுக்குமாறும், பொதுமக்களுக்கு சரியான தகவல்களை தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் பறவை காய்ச்சல் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவவில்லை, எனவே பொது மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேபோல பறவை காய்ச்சல் நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பர்பானியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 80 ஆயிரம் கோழிகளை அழிக்க உள்ளதாக கால்நடை துறை மந்திரி சுனில் கேதார் தெரிவித்தார். மேலும் அங்குள்ள கோழி பண்ணைகளில் வேலை பார்த்தவர்களுக்கு உரிய மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு, அதன்பிறகு தான் அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மந்திரி கூறினார்.

Next Story