புதுச்சேரி, காரைக்காலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை


புதுச்சேரி, காரைக்காலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Jan 2021 3:28 AM GMT (Updated: 13 Jan 2021 3:28 AM GMT)

புதுவையில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

புதுச்சேரி, 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, மத்திய அரசு கடலோர மாவட்டங்களில் ஆபரேசன் ஆம்லா மற்றும் சாகர் கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும், இந்த ஒத்திகை சீ விஜில் என்ற பெயரில் நேற்று நடத்தப்பட்டது.

அதன்படி புதுவை கடலோர பகுதியில் நேற்று காலை 6 மணிக்கு ஒத்திகை தொடங்கியது. நாளை மாலை 6 மணிவரை இது நடக்கிறது. இந்த ஒத்திகையில் புதுவை போலீசார், கடலோர காவல்படையினர் இணைந்து செயல்பட்டனர். கடலுக்குள் ரோந்து படகில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு ஒத்திகை நடத்தினர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் மர்த்தினி தலைமையில்,போலீசார் கடலிலும், கரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஒத்திகை நடத்தினர்.

அப்போது காரைக்கால் மார்க் துறைமுகத்தில், ஊடுருவ முயன்ற 2 தமிழக காவலர்களை, கடலோர போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

கடல் பகுதியிலும், கடற் கரையோர பகுதியிலும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் அதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்குமாறு கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்களிடமும் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் பற்றி தெரியவந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Next Story