சிறுபான்மையினர் நல திட்டங்களுக்கு புதுவை அரசு முனைப்புகாட்டவில்லை தேசிய ஆணைய துணைத்தலைவர் குற்றச்சாட்டு


சிறுபான்மையினர் நல திட்டங்களுக்கு புதுவை அரசு முனைப்புகாட்டவில்லை தேசிய ஆணைய துணைத்தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Jan 2021 3:39 AM GMT (Updated: 13 Jan 2021 3:39 AM GMT)

மத்திய அரசு செயல் படுத்தி வரும் சிறுபான்மையினர் நல திட்டங்களுக்கு புதுவை அரசு முனைப்பு காட்டவில்லை என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி, 

தேசிய சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் ஆதிப் ர‌ஷீத் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்தார். அவர் சிறுபான்மையினரை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது சிறுபான்மையின மக்களுக்கு புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு திட்டங்கள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மையின மக்களுக்காக 15 அம்ச திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய நான் இங்கு வந்தேன். மத்திய அரசு திட்டங்களின் பயன்கள் புதுவையில் கிடைப்பதாக சிறுபான்மையின மக்கள் தெரிவித்தனர்.

அப்போது மக்கள் சில புகார்கள் தெரிவித்தனர். புதுவை மாநிலத்தில் 15 ஆண்டுகளாக வக்பு வாரியத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. ஹஜ் கமிட்டி அமைக்கப்படவில்லை. மாநில சிறுபான்மையினர் கமிட்டி அமைக்கப்படவில்லை என்று கூறினர். நான் இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி, தலைமை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளேன். சட்டத்தின் அடிப்படையில் கூடிய விரைவில் அதனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஆக்கிரமிப்பு

புதுவையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஜி.பி.எஸ். மூலம் கண்காணித்து ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் மீட்கப்படும். இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும்.

60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் மானியம் வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசில் உள்ளன. அந்த திட்டங்களுக்கு புதுவை அரசு எந்தவித முனைப்பும் காட்டவில்லை. அதனை செயல் படுத்தும்படி வலியுறுத்தியுள்ளேன். இதன் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

வரவு-செலவு கணக்கு

அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ஊதியம் சரியாக வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர். அதுதொடர்பாக விசாரித்தபோது ஆண்டு வரவு-செலவு கணக்கை முறையாக அரசிடம் ஒப்படைக்காததால் ஊதியம் வழங்கப்படவில்லை என தெரியவந்தது. எனவே அவர்கள் வரவு-செலவு கணக்கிணை சரியாக ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு யாரையும் ஒதுக்கவில்லை. அனைவரும் சமமாக வளர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story