நெல்லையில் தொடர் மழை: பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்


நெல்லையில் தொடர் மழை: பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 13 Jan 2021 4:26 AM GMT (Updated: 13 Jan 2021 4:26 AM GMT)

தொடர் மழையால் நெல்லையில் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

நெல்லை, 

பொங்கல் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் பொங்கல் பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.

நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் லாரிகள் மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. ெபாதுமக்கள் பலர் பொங்கல்படி கொடுக்க ஆட்டோ, கார் மூலம் பொருட்களை வாங்கி சென்றனர்.

கரும்பு விற்பனை

10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட், நெல்லை டவுன் மார்க்கெட் பகுதிகளிலும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை ஓலைகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சீவலப்பேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பனை ஓலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல்படி அரிசி கொடுப்பதற்கு தேவையான நார் பெட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

அடுப்புகள்

அதேபோல் பொங்கல் வைப்பதற்கான மண்பானைகள், அடுப்புகள், அடுப்பு கட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் குலை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை டவுன் மார்க்கெட், பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளது. வழக்கத்தை விட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

விற்பனை மந்தம்

தற்போது பெய்து வரும் மழையால் மார்க்கெட் சேறும், சகதியுமாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் பொங்கல் பொருட்கள் விற்பனை, மழையால் மந்தமாகவே இருந்தது. இருந்தாலும் மழை நின்ற நேரத்திலும், சிலர் குடைபிடித்து வந்தும் பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் மழையில் பனை ஓலைகள் நனைந்து தீ பற்ற வைக்கமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இதனால் பலர் ஓலைகளை வாங்காததால், ஓலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடந்தது.

Next Story