நெல்லை சந்திப்பில் தொடர் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்


நெல்லை சந்திப்பில் தொடர் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்
x
தினத்தந்தி 13 Jan 2021 5:06 AM GMT (Updated: 13 Jan 2021 5:06 AM GMT)

நெல்லை சந்திப்பில் தொடர் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பழைய பஸ் நிலையம் ஆகியவை உடைக்கப்பட்டு ஒரே நேரத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் ஆங்காங்கே புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக நெல்லை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டன. குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு மூடப்பட்டாலும் சாலைகள் எதுவும் சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

குறிப்பாக நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி இருக்கும் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோட்டில் பயணிக்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.. மோட்டார் சைக்கிளில் வரும் பெரும்பாலானோர், பள்ளத்தில் தண்ணீரில் தேங்கி இருப்பது தெரியாமல் அதில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.

சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வந்தாலும், வடக்கு பகுதி ரோட்டில் தண்ணீர் தேங்குவதை வடியவைக்கும் எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. எத்தனை திட்டங்கள் செயல் படுத்தினாலும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலேயே தொடர்ந்து வருகிறது.

சீரமைக்க கோரிக்கை

எனவே பொதுமக்களின் நலன் கருதி நெல்லையில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story