நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2021 5:38 AM GMT (Updated: 13 Jan 2021 5:38 AM GMT)

மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தென்காசி,

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இந்த 2 அணைகளும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 2,100 கனஅடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்றும் கனமழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை அணைக்கு வினாடிக்கு 3,161 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்ததால் மாலை நிலவரப்படி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 21 ஆயிரத்து 406 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அணையின் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதேபோல் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து காலையில் 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், மாலையில் கூடுதலாக 6 ஆயிரத்து 480 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 34 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டு உள்ளதால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் கடனாநதி அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

பாலங்கள் மூழ்கின

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாபநாசம் கோவில் முன்பு உள்ள படித்துறை, பிள்ளையார் கோவில், சுவாமி மண்டபம் ஆகியவற்றை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது.

மேலும் மணிமுத்தாறு பாலம், அம்பை அருகே உள்ள சிறிய பாலம், சேரன்மாதேவி ஆற்று சிறிய பாலம் உள்ளிட்ட பாலங்களை தண்ணீர் மூழ்கடித்து சென்றது.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோவிலின் கோபுரம் பகுதி மட்டும் வெளியே தெரிகின்ற அளவிற்கு அதிக அளவில் வெள்ளம் செல்கிறது. அங்குள்ள சுடலை மாடசாமி கோவில்கள் மற்றும் சிறிய கோவில்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் விக்கிரமசிங்கபுரம், அம்பை, பாபநாசம், கடையம், ஆழ்வார்குறிச்சி, நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருவதால் ஆற்றில் வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இரு கரைகளை தொட்டப்படி வெள்ளம் பாய்ந்து செல்கிறது.

இதனால் தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. போலீசார் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆற்றில் குளித்த சிலரை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

கலெக்டர் விஷ்ணு ஆய்வு

இதற்கிடையே, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று மணிமுத்தாறு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு வரும் உபரிநீர் 21 ஆயிரத்து 406 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதே போன்று பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 480 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக 182 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அம்பை, ஆலடியூர் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு பாபநாசம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை, அம்பை தாசில்தார் வெங்கட்ராமன், உதவி என்ஜினீயர்கள் மகேஸ்வரன், சிவ கணேஷ் மற்றும் பலர் சென்றனர்.

பேரிடர் மீட்பு குழு வருகை

இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவில் நெல்லை வந்தனர். மீட்பு குழுவைச் சேர்ந்த நந்தகுமார் தலைமையில் சுமார் 50 பேர் அடங்கிய 2 குழுவினர் வந்துள்ளனர்.

அவர்கள் மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகு, டயர், துடுப்பு, கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் வந்து உள்ளனர். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

மணிமுத்தாறு 70, பாபநாசம் 85, அம்பை 48, சேரன்மாதேவி 29, ராதாபுரம் 23, நாங்குநேரி 24, பாளையங்கோட்டை 14, நெல்லை 13, கொடுமுடியாறு 14, சேர்வலாறு 16, சங்கரன்கோவில் 4, தென்காசி 3, கடனாநதி 18, ராமநதி 8.

Next Story