தூத்துக்குடி பகுதியில் தொடர் மழையால் பொதுமக்கள் அவதி


தூத்துக்குடி பகுதியில் தொடர் மழையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Jan 2021 5:42 AM GMT (Updated: 13 Jan 2021 5:42 AM GMT)

தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். கொட்டும் மழையிலும் திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

தூத்துக்குடி, 

வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் ஏற்கனவே பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மீண்டும் மழைநீர் ரோடுகளில் தேங்கத் தொடங்கியது. ஆங்காங்கே பொதுமக்களுக்கு இடையூறாக தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார்களை பயன்படுத்தி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. அதே போன்று தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். நேற்று மதியத்துக்கு பிறகு சிறிது நேரம் சாரல் இல்லாமல் லேசான வெயில் அடித்தது. மாலை 5 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

மழை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் - 17

காயல்பட்டினம் - 5

குலசேகரன்பட்டினம் - 9

விளாத்திகுளம் - 15

காடல்குடி - 14

வைப்பார் - 11

சூரங்குடி - 33

கோவில்பட்டி - 1

கயத்தார் - 2

கடம்பூர் - 4

ஓட்டப்பிடாரம் - 11

மணியாச்சி - 2

வேடநத்தம் - 10

கீழஅரசடி - 11

எட்டயபுரம் - 1

சாத்தான்குளம் - 14.6

ஸ்ரீவைகுண்டம் - 24

தூத்துக்குடி - 5

Next Story