தூத்துக்குடியில் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது


தூத்துக்குடியில் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 13 Jan 2021 5:44 AM GMT (Updated: 13 Jan 2021 5:44 AM GMT)

தூத்துக்குடியில் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தம்பிக்கை மீண்டான் மறவன்மடத்தை சேர்ந்தவர் வீரபெருமாள். இவருடைய மகன் ஜெயமுருகன் (வயது 45) . இவர் கடந்த 25.3.20 அன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்வதற்காக மாப்பிள்ளையூரணி பகுதியில் ஒரு வீட்டில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். அப்போது, அந்த வெடிகுண்டு வெடித்து வீடு சேதம் அடைந்தது.

தீவிர தேடுதல் வேட்டை

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டாளிகளை கைது செய்தனர். ஜெயமுருகன் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது சிப்காட், ஆத்தூர், நெல்லை, முத்தையாபுரம் மற்றும் புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மடத்தூர் அருகே வந்த ஜெயக்குமார், அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கீழஈரால் பகுதியில் பதுங்கி இருந்த ஜெயக்குமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

இதைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவரை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story