தூத்துக்குடியில் தொடர் மழை: பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம் வியாபாரிகள் கவலை


தூத்துக்குடியில் தொடர் மழை: பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம் வியாபாரிகள் கவலை
x
தினத்தந்தி 13 Jan 2021 5:49 AM GMT (Updated: 13 Jan 2021 5:49 AM GMT)

தூத்துக்குடியில் தொடர் மழையால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமாக இருந்தது. இது வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி, 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள்குலை, வாழைத்தார், பனங்கிழங்கு, பொங்கல் பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக போலீசார் கண்காணிப்பு பணியையும் அதிகரித்தனர்.

விற்பனை மந்தம்

ஆனால் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மதியத்துக்கு பிறகு சில மணி நேரங்கள் மழைச் சாரல் இல்லாமல் இருந்தது. லேசான வெயிலும் தலைகாட்டியது. அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. ஆனால் மாலையில் மீண்டும் சாரல் விழுந்ததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதுவியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இன்று(புதன்கிழமை) ஏராளமானோர்பொங்கல் பொருட்கள் வாங்க வருவார்கள் என வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஒரு கட்டு கரும்பு ரூ.350 முதல் ரூ.400-க்கும், மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தார்

தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு திசையன்விளை, சேரன்மாதேவி, ஆத்தூர், குரும்பூர், சத்தியமங்கலம், தேனி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. நேற்று சுமார் 200 டன் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வாழைத்தோட்டங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி இருப்பதால் வாழைத்தார் வெட்டும் பணி தொய்வடைந்து உள்ளது. இதனால் வழக்கத்தை விட குறைவாகவே வாழைத்தார்கள் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மார்க்கெட்டில் கதலி ரூ.300-க்கும், பூலான்செண்டு ரூ.600-க்கும், கோழிக்கூடு ரூ.600-க்கும், சக்கை ரூ.250 முதல் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.450-க்கும், செவ்வாழை ரூ.700-க்கும், ஏத்தம்பழம் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மக்கள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.

காய்கறி

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குழம்பு வைப்பது வழக்கம். இதனால் மக்கள் காய்கறிகளையும் வாங்கி சென்றனர். கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும், முருங்கைக்காய் ரூ.150-க்கும் விற்பனையானது. தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைவிவரம் (ஒருகிலோ) வருமாறு:-

கத்தரிக்காய் - ரூ.80

தக்காளி - ரூ.25

மிளகாய் - ரூ.30

அவரைக்காய் - ரூ.60

உருளைக்கிழங்கு - ரூ.40

சேனைக்கிழங்கு - ரூ.30

சிறுகிழங்கு - ரூ.50

பீன்ஸ் - ரூ.80

முருங்கைக்காய் - ரூ.150

கேரட் - ரூ.30

சவ்சவ் - ரூ.20

கருணைக்கிழங்கு - ரூ.40

சேம்பு - ரூ.50

சிறியவெங்காயம் - ரூ.70-80

பல்லாரி - ரூ.40-50.

Next Story