கோவில்பட்டி அரசு கல்லூரி-யூனியன் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு


கோவில்பட்டி அரசு கல்லூரி-யூனியன் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Jan 2021 5:57 AM GMT (Updated: 13 Jan 2021 5:57 AM GMT)

கோவில்பட்டி அரசு கல்லூரி மற்றும் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜோசப்சுரேஷ், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அனைவருக்கும் அவர் பொங்கல் வழங்கினார்.

இதேபோன்று கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் அமைச்சர் கடம்பூர்ராஜூ கலந்து கொண்டார். பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சசிகுமார், ஐகோர்டு ராஜா ஆகியோர் வரவேற்றனர். விழாவில் திட்டஇயக்குனர் எஸ். தனபதி, ஊராட்சிஉதவிஇயக்குனர் உமாசங்கர், பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், துணைத் தலைவர்பழனிசாமி, மாவட்டபஞ்சாயத்து தலைவர் ஆர்.சத்யா, மாவட்டபஞ்சாயத்து கவுன்சிலர்கள் கே. சந்திரசேகர், டி. தங்கம்மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ராஜலட்சுமி கல்வி குழுமங்களில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ராஜலட்சுமி கல்வியியல் கல்லூரி மற்றும் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் வாகைகுளத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்வி நிறுவன தலைவர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுககிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். தாளாளர் ராஜலட்சுமி ஆறுமுகநயினார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இணைந்து சமூக இடைவெளியை பின்பற்றி சமத்துவ பொங்கலிட்டனர்.

விழாவில் கல்விக்குழுமங்களின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் டாக்டர் சுகன்யா சம்பத், டாக்டர் ஜெயலலிதா கருப்பசாமி, டாக்டர் சுமதி ஆறுமுக கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ராஜலட்சுமி கல்வி குழுமங்களை சேர்ந்த அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சக்தி வித்யாலயா பள்ளி

தூத்துக்குடி சக்திவித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி நிறுவனர் சண்முகம் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் வண்ண கோலமிட்டனர். தொடர்ந்து ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயா சண்முகம், துணை முதல்வர் ரூபிரத்னபாக்கியம் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி பள்ளி

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு கரும்பு, பனங்கிழங்கு படையல் வைத்து, பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.

விழாவில் ஆசிரிய பயிற்றுநர்கள் பால்சாமி, மெல்ஷியா, பார்வதி, தலைமை ஆசிரியை எமல்டா, தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பாலகுமரேசன், சிறப்பு பயிற்றுநர்கள் ராஜா, சண்முகம், ரீட்டா, ஆப்பிள் ஜெயா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவ கல்லூரி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் தலைமை தாங்கினார். விழாவில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

விழாவில் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story