ராகுல்காந்தி ஈரோடு வருகை உற்சாக வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தீர்மானம்


ராகுல்காந்தி ஈரோடு வருகை உற்சாக வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Jan 2021 6:05 AM GMT (Updated: 13 Jan 2021 6:05 AM GMT)

ராகுல்காந்தி இந்த மாதம் (ஜனவரி) இறுதியில் ஈரோடு வர இருப்பதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு, 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இந்தமாதம் (ஜனவரி) இறுதியில் ஈரோடு வருவதாக தெரிகிறது. இதை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், மாவட்ட பொருளாளர் ரவி, வட்டார தலைவர்கள் முத்துக்குமார், கோபாலகிருஷ்ணன், ராவுத்குமார், ஆண்டமுத்துசாமி, சண்முகம், பழனிச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் நடராஜன், காளிதாஸ், ராஜ்குமார் உள்பட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த மாதம் இறுதியில் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் மற்றும் சென்னிமலைக்கு வரும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெசவாளர்களுடன் சந்திப்பு

இதுபற்றி மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி இந்த மாத இறுதியில் தமிழகம் வருகிறார். அப்போது ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலைக்கு வரும் அவர் அங்கு தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கு நெசவாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுகிறார். இதுபோல் சென்னிமலை செல்லும் அவர் தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பிரியங்கா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதுபோல் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது.

Next Story