குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி


குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2021 6:08 AM GMT (Updated: 13 Jan 2021 6:08 AM GMT)

குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் கூறினார்.

ஈரோடு, 

சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியன சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துறை ரீதியாக அறிக்கை

இந்த கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கு எத்தகைய செயல்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது, இன்னும் என்னென்ன பணிகள் செய்யலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

போக்சோ வழக்குகள்

கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்த வகையில் தடுக்கப்பட்டது, போக்சோ வழக்குகளில் எவ்வளவு பேருக்கு நீதி கிடைத்தது, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பது, அவர்களை மீட்பது தொடர்பான நிலையான நடவடிக்கை நடைமுறையை தேசிய குழந்தைகள் காப்பகம் வெளியிட உள்ளது.

75 சதவீதம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 75 சதவீதம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 மாதங்களில் தேசிய அளவில் 1,600-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில், 1,450 வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளிடையே போதை மருந்து கலாசாரத்தை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர்கள்

குழந்தை தொழிலாளர்களுக்காகவே ஒரு குழு அமைத்து செயல்பட வேண்டும் என சில ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.லட்சுமி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரியாதேவி, மாவட்ட சமூக நல அதிகாரி பூங்கோதை, மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story