மாவட்ட செய்திகள்

ஒரு புதிய சுதந்திர போராட்டத்தை நான் அறிவிக்க போகிறேன் ஈரோட்டில் கமல்ஹாசன் பேச்சு + "||" + I am going to announce a new freedom struggle Kamal Haasan speech in Erode

ஒரு புதிய சுதந்திர போராட்டத்தை நான் அறிவிக்க போகிறேன் ஈரோட்டில் கமல்ஹாசன் பேச்சு

ஒரு புதிய சுதந்திர போராட்டத்தை நான் அறிவிக்க போகிறேன் ஈரோட்டில் கமல்ஹாசன் பேச்சு
ஒரு புதிய சுதந்திர போராட்டத்தை நான் அறிவிக்க போகிறேன் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
ஈரோடு,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பிரசாரம் செய்த அவர் நேற்று ஈரோட்டில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

அரசியல் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையான அரசியல் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்திடம் இருக்கிறது. எங்கள்அரசியல் கொள்கையும், யுக்தியும் ஒரே வார்த்தையில் அடங்கி விட்டது அது நேர்மை. இன்னும் சற்று விரிவாக விளக்குங்கள் என்று சொன்னால் மக்கள் நலன். இது புரிந்தால் போதுமானது. மற்றபடி நுணுக்கி நுணுக்கி உங்கள் தேர்தல் அறிக்கை என்ன என்று கேட்டால், அதுவும் தயாராகிக்கொண்டு இருக்கிறது. ஆனால், தேர்தல் அறிக்கைகளை படித்து மக்கள் யாரும் ஓட்டுப்போட்டார்களா என்று, இந்த அரை நூற்றாண்டில் எனக்கு சந்தேகம் கூட வரவில்லை.

ஜவுளி தொழில் கட்டமைப்பு

நாம் தனிப்பட்ட ஆளுமைகளை காட்டித்தான் விளையாடிக்கொண்டு இருக்கிறோம். சாதி பார்த்துதான் விளையாடிக்கொண்டு இருக்கிறோம். இவன் சாதிப்பானா என்று யாரையும் தேர்ந்து எடுத்ததில்லை. அதற்கான நேரம் வந்து விட்டது. நம் தலைமுறை என்ன ஆயிற்று என்று நம் வீதிகளும், சாக்கடைகளும் நமக்கு சேதி சொல்கின்றன. நமக்கு அடுத்த தலைமுறை நம்மை பார்த்து கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும் என்றால் இன்றே பணி தொடங்க வேண்டும். அது தொடங்கும் நாளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அந்த தொடக்க நாளில் நாம் விதை போட துணிய வேண்டும். ஒரு புதிய அரசியலுக்காக, அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் இங்கே ஜவுளி தொழிலுக்கான கட்டமைப்புகள் விரைவில் உருவாக்கப்படும்.

இது வாக்குறுதி அல்ல. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கால வரையறையுடன் போட்டுக்கொண்ட பட்டியல். இங்கே விவசாய தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான எல்லா சுற்றுச்சூழலும் இங்கே இருக்கிறது. விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது, உதவி செய்வது என்பது தர்மகாரியம் அல்ல. விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது கடமை. அதில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டு மானியமாக கொடுக்க வேண்டும். அதைவிட்டு மனசுக்கு வந்ததுபோல ஏதாவது போட்டு யாசகம் கொடுப்பது அல்ல. அது வாழ்வாதாரம். விவசாயிகளுக்கு மட்டும் அல்ல. நமக்கும் வாழ்வாதாரம். 3 வேளை சாப்பிடும் அனைவரும் அதை நினைக்க வேண்டும். உண்ணும்போது மண்ணை நினை என்று நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம்

விவசாயத்தில் கணவரும், மனைவியும் இணைந்து விவசாயம் செய்கிறார்கள் இதுவே நிஜம். ஆனால், பெண்கள் வீட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது. எனவே பெண்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும். அதுமட்டுமல்ல, மக்கள் நீதி மய்யம் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றபோது கொக்கரித்து சிரித்தவர்கள் இன்று நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதுவும் சுப்ரீம்கோர்ட்டு அதை வழிமொழிவதுபோல ஒரு தீர்ப்பு எழுதியது எங்களுக்கு பெருமை.

ஈரோட்டில் கடந்த 40 ஆண்டுகளில் ஒரே ஒரு பாலம் கட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்ற ஊர்களில் நிறைய பாலங்கள் பாதியில் நிற்கிறது. அதற்கு காரணம், பாலம் என்பதை படிக்கும்போது எழுத்துக்களை தவறாக படித்து விட்டார்கள். பாலம் என்பதை லாபம் என்று படித்து விட்டனர். அப்படி படித்ததால் பாலம் கட்டுவதற்கு வைத்திருந்த பணத்தில் பெரும்பகுதியை அவர்கள் எடுத்துக்கொண்டனர். பாலம் பாதியில் நிற்கிறது.

மடிக்கணினி

ஒவ்வொரு ஊரிலும் குண்டும் குழியுமாக, சாக்கடையுமாக ஊருக்குள் நுழைய முடியாமல் இருந்தால் எப்படி வியாபாரம் செழிக்கும். எப்படி வியாபாரம் செய்ய முடியும். மக்களின் அடிப்படை உரிமை என்று நாங்கள் பலவற்றை நினைக்கிறோம். அதில் ஒன்று வீட்டுக்கு ஒரு கணினி. கணினி கொடுப்பது என்பது இலவசம் அல்ல. அரசுடன் மக்கள் தொடர்பு கொள்ள மக்கள் மீது செய்யப்படும் முதலீடு. அப்படிதான் புரிந்து கொள்ள வேண்டும். அது இலவசம் அல்ல. ஒரு கணினிதான் கொடுக்க முடியும். வீட்டில் இருக்கும் அத்தனைபேருக்கும் மடிக்கணினி கொடுக்கும் இலவச விளையாட்டு அல்ல நாங்கள் கூறுவது. அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பு வலுப்பட்டால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

கடமை

எங்கள் அரசில் எங்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களின் வேலையாட்களாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். மாண்புமிகு என்பதை, அவர்கள் செய்து முடிக்க வேண்டிய காரியத்தை செய்து சிறப்பாக பதவியை முடிக்கும்போது மக்கள் கொடுக்க வேண்டும். காமராஜருக்கு, கக்கனுக்கு கொடுக்கப்பட்டதை போல மாண்புமிகு பட்டம் கிடைக்க வேண்டும்.

இருக்கையில் உட்கார்ந்தவர்கள் எல்லாம் மாண்புமிகுக்களாக இருக்க முடியாது. அதற்கு தகுதியானவர்களே மாண்புமிகுக்கள். இதுதான் எனது புதிய அரசியல். நான் அரசியல்வாதி ஆகப்போகிறேன் என்றபோது கையெழுத்து இடுங்கள் என்றபோது புதிய அரசியல்வாதி என்று என்னால் எழுத முடிந்தது. திமிராக இப்படி எழுதுகிறான் என்று நினைத்தால் அது திமிர் அல்ல. எனது ஆசை. இது அகந்தை இல்லை. எனது கடமை. இதை தவறிவிட்டேன், இன்றாவது அதை சரி செய்கிறேன்.

புதிய சுதந்திர போராட்டம்

இப்போது ஒரு புதிய சுதந்திர போராட்டத்தை நான் அறிவிக்க போகிறேன். புதிய சத்தியாகிரகத்தை, தொடங்கினால் தொழில் தேடி அலையும் பிள்ளைகளாக இல்லாமல், தொழில் வாய்ப்பு தரும் முதலாளிகளாக மாறும் வாய்ப்பு உள்ளது. உலக சந்தையில் நமக்கு என்று ஒரு தனிஇடத்தை அங்கீகரிக்காமல் இன்னும் விட்டு வைத்திருக்கிறோம். நமது உள்கட்டமைப்பை நாம் உயர்த்திக்கொள்ளவில்லை. வெறும் வாய்ப்பேச்சு வீரர்களாகவே இருந்திருக்கிறோம். உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டால் இன்னும் 6 அல்லது 7 ஆண்டுகளில் ஒரே பாய்ச்சலில் நமது வளர்ச்சி வர்த்தகத்திலும் மற்ற துறைகளிலும் பாயும்.

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே எங்கள் ஆசை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டால், இன்று சொல்கிறேன், உலகம் தமிழகத்தை திரும்பி பார்க்கும். இப்போது நாடு கவனிக்க தொடங்கி இருக்கிறது. நாளை உலகம் நம்மை கவனிக்கும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது நாங்கள் அல்ல. நீங்கள்.

சிறு விளக்கு

என்னை நட்சத்திரமாக பார்க்காமல், உங்கள் வீட்டில் எரியும் சிறு விளக்காக பாவித்து விட்டால், உங்கள் கைகளில் என்னை பொத்தி பாதுகாத்து விட்டால் ஊழல் காற்று என்னை அணைக்க முடியாது. அப்படி செய்து பாருங்கள். காலம் கொடுத்த வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொண்டால் நாளை நமதாகும். நிச்சயம் நமதாகும்.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

இதையொட்டி மகளிர் அணி சார்பில் கட்சிக்கொடியில் உள்ள சின்னத்தை தறி மூலம் உருவாக்கிய சேலையை அவர் அறிமுகப்படுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆனந்தம் எம்.ராஜேஸ், துரைசேவுகன், நகர செயலாளர் பரணி, கமல்ஹாசன் நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.வி.மகாதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது; கமல்ஹாசன்
காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.
3. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு: கமல்ஹாசன் டுவிட்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
4. தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டம்: சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி
தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
5. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று விழுப்புரம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.