மாவட்டத்தில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின - கோட்டைப்பட்டினம் பகுதியில் கண்மாய்கள் உடைப்பு


மாவட்டத்தில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின - கோட்டைப்பட்டினம் பகுதியில் கண்மாய்கள் உடைப்பு
x
தினத்தந்தி 13 Jan 2021 10:32 AM GMT (Updated: 13 Jan 2021 10:32 AM GMT)

மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கோட்டைப்பட்டினம் பகுதியில் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குன்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

இதேபோல் ஆவுடையார் கோவில் அருகே உள்ள கண்டையன் கோட்டை கிராமத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள தண்ணீருக்குள் சாய்ந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழையால் கோட்டைப்பட்டினம் மற்றும் மீமிசல் பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. பல்வேறு கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.தொடர் மழையால் குளங்கள் உடைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள், பானை ஆகியவற்றை கொள்முதல் செய்து விற்பனைக்காக இப்பகுதியில் குவித்துள்ளனர்.ஆனால் தொடர் மழை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் வியாபாரம் நடக்காமல் மந்தமாக காணப்படுகிறது.

மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.கனமழையால் ஆறுகள் குளங்கள் நிரம்பி உள்ளது.மேலும்காரக்கோட்டை, சிங்கவனம், ஆத்தம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல்வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து சேதமடைந்துள்ளது. மணமேல்குடி அடுத்த பொன்னகரம் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே 500 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது.

கறம்பக்குடி பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் கறம்பக்குடி, புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை, சூரக்காடு, கருக்கா குறிச்சி, மழையூர், ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கடலை பயிர்கள் நீரில் மூழ்கின.

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்குமேல் செலவு செய்து பயிரிடப்பட்ட கடலை செடிகள் பாழாய்போனதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். ஏற்கனவே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமான நிலையில் கடலையும் பாதிக்கபட்டதால் விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட கடலை பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்.

அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், அன்னவாசல், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், மாங்குடி, வயலோகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்தது. மீராத்தாண்குண்டு பகுதியில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். வவ்வாநேரி, செங்கப்பட்டி, வீரப்பட்டி இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, உள்ளிட்ட பல பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story