தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன


தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 13 Jan 2021 11:59 AM GMT (Updated: 13 Jan 2021 11:59 AM GMT)

துறையூர், திருச்சி, மணிகண்டம் பகுதியில் தொடர் மழையால் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

துறையூர்,

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப தொடங்கி உள்ளன. அதேநேரம் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை(வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் அவதி அடைந்தனர். இதன்காரணமாக சாலையோர வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

இதுஒரு புறமிருக்க திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுவருவதால் 80 சதவீத சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக துறையூர் மேட்டுத்தெருவில் கணேசன்(வயது 70) என்பவரின் வீட்டு சுவரின் ஒரு பகுதி ஏற்கனவே இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மற்றொரு பகுதியும் திடீரென இடிந்து அவருடைய பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் நல்லப்பன்(70) மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மணிகண்டம் அருகே அளுந்தூர் ஊராட்சியில் தொடர் மழையால் தென்றல் நகர் பகுதியில் பன்னீர்செல்வம் (34) என்பவரின் வீட்டின் சுவர்கள், அதிகாலை 2 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அவரும், அவருடைய மனைவியும் எழுந்து, 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்து உயிர்தப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் மணிகண்டம் ஒன்றிய குழுதலைவர் கமலம், அளுந்தூர் ஊராட்சி தலைவர் கிரேசி ஆகியோர் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு, பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர். மேலும் தொடர் மழையால் திருச்சி இ.பி. ரோடு கருவாடு பேட்டையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Next Story