திருவாரூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - அறுவடை நேரத்தில் மகசூலை இழந்த சோகம் + "||" + In Thiruvarur district 1¼ million acres of paddy crop damage is submerged in rainwater - The tragedy of losing the harvest at harvest time
திருவாரூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - அறுவடை நேரத்தில் மகசூலை இழந்த சோகம்
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அறுவடை நேரத்தில் மகசூழலை இழந்ததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
திருவாரூர்,
தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் மேலேடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய கனமழை இடைவிடாது பெய்தது. நேற்று காலை லேசான தூறலாக நீடித்த மழை, மதியத்துக்கு பிறகு மீண்டும் கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் விவசாயிகள் மகசூலை இழந்து சோகத்தில் தவிக்கின்றனர்.
பொங்கல் பானை, கரும்பு, வாழைத்தார் ஆகியவற்றின் விற்பனையும் தொடர் மழையால் மந்தமாக உள்ளது. கடைவீதிகளில் கரும்புகளை வாங்க மக்கள் கூட்டம் இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருவாரூர் நகரின் பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராமப்புற சாலைகள் சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறி உள்ளன. மழையின் தாக்கத்தினால் சாலையோரங்களில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டனர். கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகள் முடங்கியதால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி வருமானம் இழந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 9 ஆயித்து 711 எக்டேர், தாளடி 38 ஆயிரத்து 765 எக்டேர் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தளாடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கன மழையினால் பயிர்கள் பாதிக்கப்பட்டு பயிர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்வதால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அறுவடை செய்ய முடியாமலும், பயிரை பாதுகாக்க முடியாத நிலையிலும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பல இடங்களில் நீரில் மூழ்கிய பயிர்கள் முளைக்க தொடங்கி உள்ளது. கன மழையினால் திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை பருவ நிலையில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மன்னார்குடி, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை சுந்தரக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கீழதிருப்பாலக்குடி கிராமத்தில் வடிகாலான காட்டாறு சரியாக தூர்வாரப்படாததால் மழை நீர் சரியாக வடியாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் சம்பா பயிர் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து இருப்பதாகவும், இதனை எவ்வாறு ஈடு செய்வது என தெரியவில்லை என மன்னார்குடி பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
கதிர்கள் நன்கு வளர்ந்து அறுவடையாக வேண்டிய நேரத்தில் மழைநீர் நெற்பயிரை மூழ்கடித்து இருப்பதால், பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மன்னார்குடி கடை வீதியின் இரு புறமும், நடை பாதைகளிலும் பொங்கலையொட்டி கரும்பு, வாழைத்தார், மஞ்சள், இஞ்சி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
மழை காரணமாக வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். பொங்கலுக்கு இன்று (புதன்கிழமை) ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மழை ஓய்ந்து வெயிலடித்தால் மட்டுமே தங்களின் முதலீடுக்கு ஏற்ற லாபத்தை ஈட்டமுடியும் என்ற நம்பிக்கையில் வியாபாரம் செய்து வருவதாக இப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.
முத்துப்பேட்டையில் நேற்று இரவு 2 மணிநேரம் இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் கண்ணாரப்பத்தர்தெரு சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். அங்கு வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறு தண்ணீர் தேங்கியதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி வடிகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.