மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 4 பேர் பலி - திருக்காட்டுப்பள்ளி அருகே பரிதாபம்


மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 4 பேர் பலி - திருக்காட்டுப்பள்ளி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 13 Jan 2021 12:51 PM GMT (Updated: 13 Jan 2021 12:51 PM GMT)

மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து நேற்று காலை தஞ்சைக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை ரபேல்புரம் கிராமத்தை சேர்ந்த ஜான் என்பவர் ஓட்டினார். நேமம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டக்டராக பணியாற்றி னார்.

அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திருக்காட்டுப்பள்ளி, ஒன்பத்துவேலி, கண்டமங்கலம், மைக்கேல்பட்டி மற்றும் வரகூர் ஆகிய ஊர்களில் மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.

வரகூரில் இருந்து புறப்பட்டு சற்று தூரம் சென்ற நிலையில் எதிரே ஒரு லாரி வந்தது. அந்த லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் ஜான், பஸ்சை இடது பக்கம் ஓரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது அங்கு புதிதாக சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டி அதில் ஜல்லி பரப்பப்பட்டு இருந்தது. அதில் பஸ்சின் முன்பக்க டயர் இறங்கியது.

அப்போது ஓரத்தில் தாழ்வாக தொங்கிய மின்சார கம்பி மீது பஸ் உரசியது. இதில் பஸ்சில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண் உள்பட 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பஸ்சில் சென்றவர்கள் மீது மின்சாரம் தாக்கியதும், இதில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானதும் குறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்்டுத்தீ போல் பரவியது. இதனால் வரகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் பெயர் விவரம்

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் விவரம் வருமாறு:-

1. கல்யாணராமன்(வயது 65),

2. கவுசல்யா(30)

(இவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம் வரகூரை சேர்ந்தவர்கள்).

3. கணேசன்(50), கருப்பூர், தஞ்சை மாவட்டம்.

4. நடராஜன்(65), விழுப்பணங்குறிச்சி, அரியலூர் மாவட்டம்.

மேலும் செந்தலையை சேர்ந்த முனியம்மாள்(50) என்பவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை அருகில் உள்ள செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் தவிர பஸ்சில் பயணம் செய்த மேலும் பலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தஞ்ைச மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் சஞ்சய், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சி்த்திரவேல், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மேலும் வைத்திலிங்கம் எம்.பி., துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசாமி, சுப்பிரமணியம், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ெரங்கசாமி ஆகியோர் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு வந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த விபத்து தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக திருக்காட்டுப்பள்ளி-தஞ்சை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 4 பேர் பலியான பரிதாப சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story