செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - கரும்பு அரவை நிறுத்தம் + "||" + At the Cooperative Sugar Mill Workers' sit-in - Stop cane crushing
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - கரும்பு அரவை நிறுத்தம்
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது.
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் நிரந்தர தொழிலாளர்களான 200 பேர் 2019-2020-ம் ஆண்டு ஈட்டிய விடுப்புக்கான தொகையை வழங்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணி முதல் ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுடன், சர்க்கரை ஆலை நிர்வாக மேலாண்மை இயக்குனர் நடந்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. ஆலை நிர்வாகம் கோரிக்கையை ஏற்காவிடில் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரவைப் பருவம் தொடங்கி விளைநிலங்களில் இருந்து கரும்பு வெட்டி தினமும் ஆலைக்கு கரும்பு வந்துகொண்டிருந்தது. முன்னறிவிப்பின்றி தொழிலாளர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆலைக்கு கரும்புகள் ஏற்றி வந்த சுமார் 150 லாரிகள், 1500 டன் கரும்புகளுடன் ஆலை வளாகத்திற்குள் வரிசைகட்டி நிற்கின்றன.
இதனால் லாரியில் ஏற்றப்பட்டுள்ள கரும்பு மற்றும் விவசாய நிலத்தில் வெட்டப்பட்டு ஆலைக்கு ஏற்றுவதற்கு தயாராக உள்ள சுமார் 500 டன் கரும்பு காய்ந்து எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் ஒரு நாளைக்கு 2,500 டன் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.