காரியாபட்டி பகுதியில் தொடர்மழை: நெற்பயிர்கள் நீரில் மூழ்கின - விவசாயிகள் கவலை


காரியாபட்டி பகுதியில் தொடர்மழை: நெற்பயிர்கள் நீரில் மூழ்கின - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 13 Jan 2021 2:47 PM GMT (Updated: 13 Jan 2021 2:47 PM GMT)

காரியாபட்டி பகுதியில் பெய்து வரும் தொடர்மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா முடுக்கன்குளம், வி.நாங்கூர், கே. நெடுங்குளம், கீழ காஞ்சரங்குளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமானது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெற்கதிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. எனவே கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் என்ன செய்வது என்பது தெரியாமல் கவலையில் உள்ளோம்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story