காரைக்குடி பகுதியில் விடிய, விடிய பெய்த மழை; வீடுகள் இடிந்தன - கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


காரைக்குடி பகுதியில் விடிய, விடிய பெய்த மழை; வீடுகள் இடிந்தன - கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 Jan 2021 3:03 PM GMT (Updated: 13 Jan 2021 3:03 PM GMT)

காரைக்குடி பகுதியில் இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்ததில் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன்-மனைவி உயிர் தப்பினர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய தொடர் மழை பெய்தது.. காரைக்குடி பகுதியில் பெய்த மழையால் நகர் முழுவதும் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது. பலத்த மழை காரணமாக காரைக்குடி பாப்பா ஊருணி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரிமுத்து என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் முற்றிலும் விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து, அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் கூலித் தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டின் பின்புறம் நீலகண்டன் என்பவரது குடிசை வீடு இருந்தது. மாரிமுத்துவின் வீட்டின் சுவர் இடிந்து நீலகண்டன் வீட்டின் மீது விழுந்ததால் அவரது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. அப்போது நீலகண்டன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் வீட்டின் வீட்டின் மற்றொரு பகுதியில் தூங்கிக்கொண்டிருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரைக்குடி பகுதியில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டத்தினால் சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் காட்சியளித்த நிலையில் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர். காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் 2-வது பீட் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் தோண்டப்பட்ட குழியில் சிக்கிக்கொண்டது. அதன் பின்னர் ஜே.சி.பி எந்திரம் மூலம் பஸ் மீட்கப்பட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதேபோல் சிங்கம்புணரி மற்றும் அதன் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, பிரான்மலை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் பயிரிட்ட நிலையில் தற்போது அவை அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. மழையின் காரணமாக இந்த நெற்பயிர்கள் முற்றிலும் தரையில் சாய்ந்து கிடக்கின்றன. சில பயிர்கள் அழுக தொடங்கி உள்ளது. இதனால் நெல் பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் கவலையடைந்து வருகின்றனர்.

இதுதவிர ஏற்கனவே மழைக்கு முன்னதாக அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடர் மழை காரணமாக காய வைக்க இடமில்லாமலும், காய வைத்த நெல்லை மூடுவதற்கு போதிய தார்ப்பாய் வசதி இல்லாமலும் அவதியடைந்து வருகின்றனர்..

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிவகங்கை-12.4, மானாமதுரை-15.6, இளையான்குடி-12.2, திருப்புவனம்-16.4, தேவகோட்டை-36.4, காரைக்குடி-41, திருப்பத்தூர்-17.4, காளையார்கோவில்-20.6, சிங்கம்புணரி-9, இதில் காரைக்குடியில் அதிக பட்சமாக 41 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக சிங்கம்புணரியில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

Next Story